

சென்னை,
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி குறித்து பேசும் புதிய அரசியலை நாம் முன்னெடுத்துச் செல்வோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இன்று மாலை, நமது வீ த லீடர்ஸ் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், பெரும் திரளெனக் கூடியிருந்த சகோதர சகோதரிகளுடன் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி. இந்தப் பேரணியில் பங்கேற்றுச் சிறப்பித்த, சின்னக் கலைவாணர், அண்ணன் அமரர் விவேக்கின் மனைவி அருள்செல்விக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயற்கையைப் பாதுகாப்பது என்பது வெறும் மரங்களை நடுவது மட்டும் அல்ல. நமது நீர்வளம், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும் தான். காவிரி நதி நீர் பிரச்சினை, மேகதாது அணைத் திட்டம் போன்ற விவகாரங்களில் தமிழ்நாட்டின் நீர்வள உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம். அதேபோல், நமது கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், ஊரணிகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாத்து, மழைநீரை சேமிக்கும் வகையில் அவற்றை மேம்படுத்த வேண்டியதும் நமது கடமை.
கடந்த 16 நாட்களில் நமது வீ த லீடர்ஸ் சார்பில், 6,25,760 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்திற்கான நமது இலக்கு 20 லட்சம் மரங்கள். இன்னும் 15 நாட்களில் 14 லட்சம் மரங்களை நட்டு இந்த இலக்கை எட்ட வேண்டும். அண்ணன், சின்னக் கலைவாணர் அமரர் விவேக்கின் பசுமைப் பணியை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர் ஏற்கனவே 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உருவாக்கிய பசுமைப் பாதையை, வரும் மாதங்களில் மீதமுள்ள மரங்களை நட்டு, அவரது 1 கோடி மரங்கள் என்ற கனவை நிறைவேற்றும் பணியில் நாமும் பங்கெடுப்போம்.
தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம் ஒரு வேண்டுகோள். ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை வழங்க வேண்டும் என்ற உங்கள் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். ஆனால், உங்கள் அமைச்சரவையில் சிலர் லஞ்சம் பெறுவதாக வரும் குற்றச்சாட்டுகளை விசாரித்து, தவறு நடந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவது உங்கள் பொறுப்பு.
இன்றைய இளைஞர்களின் குரலை நாம் கேட்க வேண்டும். அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு, அவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பிறர் குடும்பத்தைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவது, தனிப்பட்ட தாக்குதல்கள் செய்வது போன்ற, அநாகரிக அரசியலை, இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி குறித்து பேசும் புதிய அரசியலை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.
நீர்நிலைகளை காப்போம்; மரங்களை வளர்ப்போம்; அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவோம். கிராமங்களை முன்னேற்றுவோம். நம் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்குவோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.