அமலாக்கத்துறை சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்: செந்தில் பாலாஜி

டாஸ்மாக் டெண்டரில் எந்தவித முறைகேடும் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னை,
அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:டாஸ்மாக் கொள்முதலில் எந்த சலுகையும் யாருக்கும் காட்டப்படவில்லை. அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் டெண்டரில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதனை மெருகேற்றி முறையாக டெண்டர்கள் வழங்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி ஒருமுறை ஆயிரம் கோடி என்கிறார். இன்னொரு முறை 40 ஆயிரம் கோடி என்கிறார்.
படத்தில் வரும் காட்சிகள் போல எதிர்க்கட்சிகள் மாறி மாறி பேசி வருகின்றன. தமிழக அரசின் செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் மத்திய அரசு அமலாக்கத்துறையை ஏவியுள்ளது. டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் குற்றச்சாட்டை எந்த ஆவணத்தின் அடிப்படையில் முன்வைக்கிறார்கள். அமலாக்கத்துறை எடுத்துள்ள சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்ளும்" இவ்வாறு கூறினார்.
முன்னதாக சென்னையில் உள்ள தமிழக அரசின் டாஸ்மாக் தலைமை அலுவலகம், குடோன் மற்றும் பல்வேறு மதுபான தொழிற்சாலைகளின் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 6-ந்தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனை குறித்து அமலாக்கத்துறை ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதில், தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளது என்று அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி இருந்தது.






