மேகதாது பிரச்சினையில் தமிழக உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்; அமைச்சர் நிர்மல் குமார் உறுதி

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதல்-மந்திரி சொன்னது தவறான தகவல் என்றும், அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்றும் தேனியில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறினார்.
மேகதாது பிரச்சினையில் தமிழக உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்; அமைச்சர் நிர்மல் குமார் உறுதி
Published on

தேனி,

தேனியில் மின் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியதாவது: -'போதைப்பொருட்கள் இல்லா தமிழகம் என்பது நமது அரசின் முதல் குறிக்கோள். தேனி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவது முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டும். மதுபானக்கடைகள் அரசு விதிமுறைகளை மீறிசெயல்பட்டால் உடனடியாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேகதாது அணை

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தவறான தகவல் சொல்லி இருக்கிறார். கோர்ட்டு உத்தரவு கொடுத்தும் அவர்கள் நிறைவேற்றவில்லை. அரசியல் காரணங்களுக்காக பேசுகிறார்கள். முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தி.மு.க.வின் தவறான நடவடிக்கையால் தான் இவ்வளவு தூரம் மோசமான சூழலில் விட்டுள்ளது.மேகதாது அணை விவகாரத்தில் மனு தள்ளுபடி என்று டி.கே.சிவக்குமார் சொன்னது தவறான தகவல். அணை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்றும், சமர்ப்பிக்கலாம் என்றும் தான் கோர்ட்டு சொல்லியது.

சட்டப்படி நடவடிக்கை

இன்னும் திட்டத்துக்கு அனுமதி தரவில்லை. கண்டிப்பாக அந்த திட்டத்துக்கு அனுமதி தராத வகையில் தான் நமது அனைத்து சட்டப்படியான நடவடிக்கையும் இருக்கும். மேகதாது, முல்லைப்பெரியாறு அணை விவகாரங்களில் சுப்ரீம் கோர்ட்டு என்ன சொல்லி இருக்கிறதோ அது தான் நமது முடிவு. எந்த இடத்திலும் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். கடுமையான நடந்து கொள்வோம். தி.மு.க. செய்தது போன்று எந்த தவறும், வரலாற்று பிழையும் நமது அரசில் இருக்காது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து எப்போது தண்ணீர் திறப்பு என்பதை முதல்-அமைச்சர் ஆய்வு செய்து முடிவு எடுப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com