முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேசியது என்ன..? - கூட்டணி கட்சி தலைவர்கள் விளக்கம்

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேசியது என்ன..? - கூட்டணி கட்சி தலைவர்கள் விளக்கம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.

இதில், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர். இதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட கோரி வைக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முத்தரசன், சண்முகம், திருமாவளவன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் பி.சண்முகம், " 3 கட்சிகள் சார்பில் முதல்-அமைச்சரை சந்தித்து சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயக்க கோரிக்கை வைத்தோம். தனி சட்டத்திற்கான தேவையை முதல்-அமைச்சரிடம் எடுத்துரைத்தோம். அதனை முதல்-அமைச்சர் ஏற்றுக் கொண்டார்" என்று தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முத்தரசன், "சாதிய ஆணவக் கொலைகள் அதிகரிப்பது முற்போக்கான மாநிலத்துக்கு அழகல்ல. ஒரே சாதியில் கூட காதலித்தால், அதை தங்களுடைய குடும்ப கவுரவ பிரச்சினையாக கருதும் மனநிலை இருக்கிறது. 3 கட்சிகள் சார்பில் முதல்-அமைச்சரை சந்தித்து சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயக்க கோரிக்கை வைத்தோம். அதனை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார்" என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், "ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதால் முதல்-அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். ஆணவக் கொலையை தடுக்க, சட்டம் இயற்ற தேசிய பெண்கள் ஆணையம் முன்மொழிந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆணவக் கொலைகள் நடந்து வருகின்றன. தனிச் சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருப்பதால் முதல்-அமைச்சரிடம் பேசினோம்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com