த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது: காவல்துறை அளித்த விளக்கம் என்ன..?

இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது
Published on: 

சென்னை,

முறையற்ற நடத்தை தொடர்பான, குற்றச்சாட்டுக்கு உள்ளான கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

முறையற்ற நடத்தை

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

23.11.2026 அன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாகப் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், அதே நாளில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) குற்ற எண் 91/2026-ன் கீழ் உரிய சட்டப்பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

காவல்துறை விசாரணை

தொடக்கத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சென்னை உயர்நீதிமன்றம் WP (Crl) No. 3183/2026 வழக்கில் 24.11.2026 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங், IPS அவர்கள், சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் (IGP) என். காமினி, IPS அவர்களின் மேற்பார்வையில் இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டார்.

அருள் விக்னேஷ் கைது

விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக, உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவினர் இணைந்து 201 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியுள்ளனர்.

ஐகோர்ட்டு உத்தரவு

மேலும், இது தொடர்பாக எந்தவொரு தகவலையும் பொதுவெளியில் வெளியிடவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், அந்த உத்தரவுக்கு முரணாக பதிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X