மதுக்கடையே இல்லாத நகரத்தில் தற்போது மதுக்கடைகள் திறப்பு நடவடிக்கை எடுக்கும் அவசியம் என்ன? - ராமதாஸ் கேள்வி


மதுக்கடையே இல்லாத நகரத்தில் தற்போது மதுக்கடைகள் திறப்பு நடவடிக்கை எடுக்கும் அவசியம் என்ன? - ராமதாஸ் கேள்வி
x
தினத்தந்தி 21 Dec 2025 11:40 AM IST (Updated: 21 Dec 2025 1:57 PM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் பகுதியில் தற்போது 10 க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டிலேயே மதுக்கடைகள் இல்லாத நகரமாக ஜெயங்கொண்டம் நகரம் விளங்கி வருகிறது. இதனால் அந்த நகர மக்கள் பெருமை கொண்டனர். இதற்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக மதுக்கடைகளுக்கு எதிராக ஜெயங்கொண்டம் நகர பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் எனது வழிகாட்டுதலுடன் நடத்திய தொடர் போராட்டங்களே காரணம். ஜெயங்கொண்டம் நகரம் மதுக்கடை இல்லா நகரம் என்பது மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது.

அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையுடன் அமைதியான சூழலில் வசித்து வரும் ஜெயங்கொண்டம் பகுதியில் திடீரென தற்போது 10 க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உடன் பார்களை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்கிறது. அதற்கு மாவட்ட நிர்வாகம் உடந்தையாக உள்ளது. இது நகர பொதுமக்களின் உரிமைக்கு எதிரான செயல்.

அதிலும் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை, பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், ஆலயங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் மதுக்கடைகள் அமைக்க முயல்வது கண்டனத்திற்குரியது. இது நாள் வரை ஜெயங்கொண்டம் நகர பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இருந்த மாவட்ட நிர்வாகம் தற்போது அந்த பகுதி மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட திட்டமிட்டு உள்ளது கண்டனத்திற்குரியது.

அமைதியாக உள்ள ஜெயங்கொண்டம் நகரில் மதுக்கடை திறப்பின் மூலம் சட்டம் ஒழுங்கிற்கு ஊறு விளைவிக்க அரசு அதிகாரிகள் உடந்தையாக இருக்கலாமா?

உடனடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் மதுக்கடைகள் திறப்பை அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும். மீறும்பட்சத்தில் ஜெயங்கொண்டம் நகர மக்களின் ஆதரவுடன் கடுமையான போராட்டங்கள் மதுக்கடை திறப்பிற்கு எதிராக நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story