

சென்னை,
இறுதிக்கட்ட பிரசாரம் மிகத்தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்ட வேண்டிய அவசியம் என்ன என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நாடாளுமன்ற கூட்டத்தொடரை வரும் ஏப்ரல் 16, 17 தேதிகளில் மோடி அரசு கூட்டியிருக்கிறது. தமிழ்நாடு,மேற்கு வங்கம் ஆகிய இரண்டு முக்கியமான மாநிலங்களில், குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் இறுதிக்கட்ட பிரசாரம் மிகத்தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை இவ்வளவு அவசரமாக கூட்ட வேண்டிய அவசியம் என்ன? ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு நாடாளுமன்றத்தை கூட்டமுடியாதா?
நேர் வழியில் மக்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வெல்ல முடியாத பாஜக இதுபோல் குறுக்கு வழியில் பிரசாரத்தை முடக்க வேண்டும் என்று நினைப்பதும்,அதற்காக மதிப்பு மிகுந்த நாடளுமன்றத்தைப் பயன்படுத்த நினைப்பதும் அவமானகரமானது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோவை நாங்கள் வரவேற்கிறோம். 30 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி வரலாறு படைத்த கட்சி காங்கிரஸ் கட்சி. ஆனால் மகளிர் இட ஒதுக்கீட்டின் பெயரால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகளைக் குறைந்த அளவில் அதிகரித்து, உத்திரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களின் நாடளுமன்ற தொகுதிகளை மிக அதிக அளவில் அதிகரிப்பதை நாங்கள் ஏற்க முடியாது.
தென் மாநிலங்களில் வெற்றிபெறாமலே ஒரு கட்சி, மத்திய அரசில் ஆட்சி அமைக்க முடியும். இதனால் அதிக அளவில் வரிகட்டுகிற தென்மாநிலங்களுக்கு முக்கியமான பிரச்சினைகளில் முடிவெடுக்கிற அதிகாரம் இல்லாமல் போகும். ஆகவே இதுகுறித்து முதலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விரிவாக விவாதிக்க வேண்டும். அதில் ஒத்தகருத்து ஏற்பட்டால் மட்டுமே நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும்.
உடனடியாக தேர்தல் நேரத்தில் கூட்டப்பட்டிருக்கிற நாடாளுமன்ற கூட்டத்தொடரை மோடி அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.