கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது 4 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க என்ன காரணம்..? - நீலம் பண்பாட்டு மையம் கேள்வி

அரசின் அணுகுமுறை, நடவடிக்கை எடுக்கத் தவறியவர்களின் பங்கு என அனைத்தும் வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது 4 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க என்ன காரணம்..? - நீலம் பண்பாட்டு மையம் கேள்வி
Published on: 

சென்னை,

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது 4 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கான காரணத்தை முதல்-அமைச்சர் விஜய் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட ஒழுக்கம்

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக வெற்றிக்கழகம் மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றது. ஜூலை மாதத்திலேயே கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதான புகார் அரசு தரப்புக்கு தெரிவிக்கப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் பொருள், சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற தொடக்க காலத்திலேயே இத்தகைய புகார்களுக்கு உள்ளாகும் வகையிலான செயல்களில் அவர் ஈடுபட்டிருக்கிறார் என்பதுதான். ஒரு மக்கள் பிரதிநிதியிடம் எதிர்பார்க்கப்படுவது தனிப்பட்ட ஒழுக்கம் மட்டுமல்ல; அவர் வகிக்கும் பொறுப்பின் மீதான மரியாதையும், மக்களிடம் கொண்டிருக்க வேண்டிய பொறுப்புணர்வும்தான்.

அலட்சியம்

ஆனால், வெற்றி பெற்ற சில வாரங்களிலேயே இத்தகைய புகார்களுக்கு உள்ளாகும் அளவுக்கு ஒருவர் செயல்பட்டிருக்கிறார் என்றால், அவர் அரசியலையும் மக்கள் வழங்கிய அதிகாரத்தையும் எவ்வளவு அலட்சியமாக அணுகியிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அதையும்விடக் கண்டனத்திற்குரிய விடயம், ஜூலை மாதத்திலிருந்தே இந்த விவகாரம் அரசுக்குத் தெரிந்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது என்பதுதான்.

அரசின் அணுகுமுறை

ஒரு மக்கள் பிரதிநிதி மீதான இத்தகைய புகார்களில் அரசியல் தலையீடோ, அதிகாரத்தின் துணையோ கொண்டு அவரைக் காப்பாற்ற முயன்றிருந்தால், அதற்குப் பொறுப்பான அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். புகாரின் தன்மை, அதன் மீதான அரசின் அணுகுமுறை, நடவடிக்கை எடுக்கத் தவறியவர்களின் பங்கு என அனைத்தும் வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும்.

நடவடிக்கைகள் என்ன

பெண்கள் பாதுகாப்பை முதன்மை பிரச்சாரமாக முன்வைத்து ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொறுப்பற்ற இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பெண்களின் பாதுகாப்பும், மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புடைமையும் வெறும் முழக்கமல்ல; அவை சமூகத்தின் அடிப்படை.

இந்த விவகாரத்தில் த.வெ.க. அரசும், முதல்-அமைச்சர் விஜயும் இனியும் மௌனம் காக்காமல், புகார் அளிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும், உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கான காரணத்தையும் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X