வாட்ஸ்அப் குழுக்களுக்கு கிடுக்கிப்பிடி; அட்மின்கள் தான் முழு பொறுப்பு: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

தேர்தல் விதிமுறை மீறல் நடந்தால் வாட்ஸ்அப் அட்மின்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப் குழுக்களுக்கு கிடுக்கிப்பிடி; அட்மின்கள் தான் முழு பொறுப்பு: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
Published on

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாட்ஸ்அப் குழுக்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாட்ஸ்அப் குழுக்களில் நடைபெறும் தேர்தல் விதிமுறை மீறல்களுக்கு அட்மின்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 15-ம் தேதி மாலை முதல் அமலுக்கு வந்துள்ளன. தற்போது தேர்தல் பிரச்சாரங்களில் சமூக ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. இதில் வாட்ஸ்அப் முன்னணியில் இருக்கிறது. ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் ஆயிரக்கணக்கான வாட்ஸ்அப் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பரப்பப்படும் தகவல்கள், செய்திகள் எளிதாகவும், அதிக எண்ணிக்கையிலும் மக்களை சென்றடையும் என்ற நிலை இருப்பதால், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரங்களுக்கு வாட்ஸ்அப் குழுக்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதையடுத்து வாட்ஸ்அப் குழுக்களை கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக மாவட்டம்தோறும் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்து. அந்த குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் அனைத்து வாட்ஸ் அப் குழுக்களின் அட்மின்களுக்கும் ஒரு எச்சரிக்கை தகவல் அனுப்பியுள்ளனர். அதில் வாட்ஸ்அப் குழுக்களில் நடைபெறும் தேர்தல் விதிமுறை மீறல்களுக்கு குழுக்களின் அட்மின்களே பொறுப்பு. எனவே வாட்ஸ்அப் குழுக்களில் விதிமுறை மீறல் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

விதிமுறை மீறல் நடந்தால் வாட்ஸ்அப் அட்மின்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல வாட்ஸ்அப் குழுக்கள் அட்மின் ஒன்லி என்ற நிலைக்கு மாறியுள்ளன. மேலும் அந்த குழுக்களில் தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கை தொடர்பாக அட்மின்கள் தங்கள் குழு உறுப்பினர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com