

சென்னை,
அரசு ஊழியர்களின் தொடர்ச்சியான அலட்சியப் போக்கு அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சப்படும் அளவிற்கு ஒரு மோசமான சூழலை உருவாக்கியுள்ளன என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் ஊட்டச்சத்திற்காக வழங்க வேண்டிய முட்டைகளை அவர்களின் படுக்கையிலும், கால்களுக்கு அருகிலும் ஊழியர்கள் அலட்சியமாக வீசிச் செல்வது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றான ஸ்டான்லி மருத்துவமனையிலேயே, நோயாளிகளை இவ்வளவு மோசமான நிலையில் நடத்தப்படும் நிலையில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளின் நிலையை நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
அதே போல, நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் கெட்டுப்போய் அழுகிய நிலையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக வழங்கப்படும் முட்டைகள் தொடங்கி, அரசு உயர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் வரை அனைத்தும் தரமற்றதாக இருப்பதோடு, அரசு ஊழியர்களின் தொடர்ச்சியான அலட்சியப் போக்கும், அரசின் மெத்தனமான செயல்பாடுகளும், அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சப்படும் அளவிற்கு ஒரு மோசமான சூழலை உருவாக்கியுள்ளன.
எனவே, அங்கன்வாடி மையங்களுக்குத் தரமற்ற முட்டைகளை வழங்கிய ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய நோயாளிகளைக் கண்ணியத்துடன் நடத்திட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.