

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 27 தொகுதிகளுக்குமான பாஜக வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதனிடையே, சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் பியூஷ் கோயல் தலைமையில் பாஜக வேட்பாளர் பட்டியல் தேர்வு தொடர்பான மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் யார்? என்பது குறித்த பட்டியல் குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஆலோசனைக்குப்பின் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தொகுதிக்கு தலா 3 பேர் என்ற அடிப்படையில் 27 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்து உத்தேச பட்டியலை டெல்லி தலைமைக்கு அனுப்ப உள்ளோம். அதில் தகுந்த வேட்பாளர்களை பாஜக தலைமை முடிவு செய்யும்.
27 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை ஓரிரு நாட்களில் அறிவிப்போம். பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால் எந்த தொகுதி என தற்போது அறிவிக்க முடியாது. புதுச்சேரி செல்ல வரும் 4ம் தேதி பிரதமர் மோடி சென்னை வர உள்ளார்.
என்றார்.