மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் யார்?

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இந்த 2 தொகுதியிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் யார்?
Published on

சென்னை,

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் யார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இடைத்தேர்தலிலும் 4 முனைப்போட்டி

தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலின்போது 4 முனைப்போட்டி நிலவியது. இடைத்தேர்தலிலும் அதேநிலை தொடர்கிறது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன.

வேட்பாளர்கள் யார்?

தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வரும் 13-ந் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றனர்.

த.வெ.க.வில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வந்தாலும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்) ஆகியோருக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

அ.தி.மு.க. வேட்பாளர்கள் குறித்து எதிர்பார்ப்பு

இந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இந்த 2 தொகுதியிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வில் இணைந்ததால், மீண்டும் அவர்களே எதிர் அணியில் (த.வெ.க.) இருந்து களம் இறக்கப்படுவார்கள் என்று அ.தி.மு.க. கருதுகிறது. எனவே, பழிக்கு பழியாக அவர்களை எப்படியாவது தோற்கடித்தாக வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை கங்கணம் கட்டி நிற்கிறது.

உமா சங்கரி - கணிகா சம்பத்

அதனால், வேட்பாளர்களையும் அதற்கு ஏற்றவகையில் களம் இறக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதுவும், பெண் வேட்பாளர்கள் மூலமே பதிலடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.

அந்த வகையில், அ.தி.மு.க. வேட்பாளர்களாக மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. கணிகா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமி வின்சென்டின் மகள் வக்கீல் உமா சங்கரியும் களம் இறக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com