

சென்னை,
தமிழகத்தில் 17-வது சட்டசபையை அலங்கரிக்கப்போகும் உறுப்பினர்கள் யார்? என்பதை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்திருக்கிறது.
1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது தேர்தல் வரை, 69 ஆண்டுகள் இல்லாத வகையில் 85.15 சதவீதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது.
பொதுவாக, அதிக வாக்குப்பதிவு நடைபெற்றால், ஆளுங்கட்சி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அல்லது அதிக வெறுப்பு கொண்டிருப்பதாகவும் இருவிதமாக எடுத்துக்கொள்ளலாம் என்று கூறுவார்கள்.
எடுத்துக்காட்டாக, தமிழக சட்டசபை தேர்தலில் இதற்கு முன்பு அதிக வாக்குப்பதிவு நடைபெற்றது 2011-ம் ஆண்டு. அப்போது, 78.01 சதவீத வாக்குகள் பதிவாகின.
அ.தி.மு.க. ஆட்சி அமைத்த அதே நேரத்தில், தி.மு.க.வால் எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த தே.மு.தி.க.தான் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது.
ஆனால், நடைபெற்று முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் பதிவாகியுள்ள 85.15 சதவீத வாக்குகளை கொண்டு, யாருக்கு வெற்றி கிடைக்கும்? என்று கணித்து கூற முடியாத வகையில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
கடந்த (2021) சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும்போது, இந்த முறை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கூடுதலாக வாக்களித்துள்ளனர். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், சுமார் 10 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு சதவீதம் சற்று குறைந்துள்ளது. மற்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு 80 சதவீதத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் இந்த முறை நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என போட்டி இருந்தாலும், முதல் 3 கட்சிகளுக்கு இடையேதான் கடுமையான போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
ஆளுங்கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தேர்தல் களத்திற்கு புது வரவான தமிழக வெற்றிக் கழகம் இடையேதான் மும்முனை போட்டி நிலவுவதாகவும், நாம் தமிழர் கட்சி களத்தில் இருந்தாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் சொல்லப்படுகிறது.
அப்படி என்றால், தி.மு.க., அ.தி.மு.க., தமிழக வெற்றிக் கழகம் ஆகிய 3 கட்சிகளில் யார் ஆட்சி அரியனையில் ஏறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மனதிலும் எழலாம். தேர்தல் தேதி அறிவித்த நேரத்தில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு என்றும், தேர்தல் தேதி நெருங்கிய நேரத்தில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு என்றும் கருத்து கணிப்புகள் கூறின. அதே நேரத்தில், இளைஞர்கள் பட்டாளம் எல்லாம், விஜய்.. விஜய்.. என்று விசிலை கையில் எடுத்து ஊதின.
நடந்த எல்லாவற்றையும் பார்க்கும்போது, ஜெயிக்கப்போவது யாரு? என்பதை கட்டியமிட்டு கூறமுடியவில்லை. இந்த தேர்தலில், சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் வாக்குகள் சிதறிப்போய் இருப்பதாக கூறப்படுகிறது.
அதனால், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், பெரும்பாலானவற்றில் குறைந்த அளவு வாக்கு வித்தியாசமே வெற்றியை தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால், அரசியல் தலைவர்களும், வேட்பாளர்களும் இன்னும் தேர்தல் ஜூரத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கின்றனர்.
மக்களும் முடிவுக்காக காத்திருப்பதால், தேர்தல் ஜூரம் அவர்களுக்கும் லேசாக அடிக்கத்தான் செய்கிறது. எது எப்படியோ, ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில், மக்கள் அளித்த தீர்ப்பு தெரியவர இன்னும் 9 நாட்கள் (மே 4-ந் தேதி) இருக்கிறது. அதுவரை அனைவரும் காத்திருந்துதான் ஆக வேண்டும்.