கட்டுமானப் பொருட்களின் கட்டுக்கடங்கா விலை உயர்வுக்கு காரணம் யார்? - வேல்முருகன் கேள்வி

வீடு கட்ட நினைக்கும் மக்களின் கனவை மேலும் தள்ளிப்போடும் நிலை உருவாக்கியுள்ளதாக வேல்முருகன் தெரிவித்தார்.
வேல்முருகன்
Published on

சென்னை,

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்கள், நடுத்தர குடும்பங்கள், சிறு கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் துறையைச் சார்ந்து வாழும் லட்சக்கணக்கான மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வீடு கட்டும் கனவு..

ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை ஒரே நேரத்தில் உயர்த்தப்பட்டிருப்பது வீடு கட்ட நினைக்கும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் கனவை மேலும் தள்ளிப்போடும் நிலையை உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு நெருக்கடி, வருமானச் சுருக்கம் ஆகியவற்றால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த விலை உயர்வு மேலும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துகிறது.

விலை உயர்வு

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் ஒரு வீடு கட்டுவதற்கான மொத்த செலவு பல லட்சம் ரூபாயில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் வரை கூடும் அபாயம் உள்ளது. இதனால் வீடு கட்டும் திட்டங்களைப் பல குடும்பங்கள் கைவிடும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் கட்டுமானத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படக்கூடும்.

எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த விலை உயர்வுக்கானக் காரணங்களை ஆய்வு செய்து, செயற்கைப் பற்றாக்குறை, பதுக்கல் அல்லது சந்தைக் கட்டுப்பாட்டு முறைகேடுகள் ஏதேனும் உள்ளனவா? என்பதை விசாரிக்க வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உரிய நடவடிக்கை வேண்டும்

அதே நேரத்தில், எரிபொருள் விலை உயர்வு மற்றும் போக்குவரத்துச் செலவினால் ஏற்படும் தாக்கங்களைக் குறைக்கும் வகையில் மத்திய அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது அரசுகளின் அடிப்படைப் பொறுப்பாகும்.

மக்களின் சொந்தவீட்டுக் கனவு சிதையக் கூடாது. கட்டுமானத் துறை முடங்கக் கூடாது. பொதுமக்களின் பொருளாதாரச் சுமை மேலும் அதிகரிக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com