அதிமுக சட்டமன்ற தலைவர் யார்? - சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார்...?

மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்தால், அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயாது.
அதிமுக சட்டமன்ற தலைவர் யார்? - சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார்...?
Published on

சென்னை,

அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு உள்ளது. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று ஒரு தரப்பும், எஸ்.பி.வேலுமணிதான் என்று மற்றொரு தரப்பும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் முதல் முடிவு எடுக்க வேண்டியது சபாநாயகர் தான்? ஏனென்றால் அவர்தான் கட்சி கொறடா யார்? என்பதை முடிவு செய்து அறிவிக்க வேண்டும்.

ஆனால் அதில் தான் பெரும் பிரச்சினை இருக்கிறது. ஏனென்றால் இருதரப்பும் தங்களுக்கான ஆதரவு கடிதங்களை கொடுத்து இருக்கிறார்கள். அதில் சுவாரசியம் என்னவென்றால் எடப்பாடி பழனிசாமி தனக்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது என்று அவர்களின் கையெழுத்தோடு கடிதம் கொடுத்து இருக்கிறார். அதேபோல பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கையெழுத்தோடு, எஸ்.பி.வேலுமணியும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து இருக்கிறார்.

அதாவது இரு கடிதங்களிலும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துக்கள் இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கப்போகும் முடிவுதான், சட்டசபையில் அ.தி.மு.க.வின் தலைமை யார் என்பதனை முடிவு செய்யும். ஆனால் சபாநாயகர் என்ன முடிவு எடுக்க வேண்டும்? எப்போது முடிவு எடுக்க வேண்டும் என்பதனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. இது அவருடைய தனிப்பட்ட அதிகார முடிவாகும்.

தற்போது பிரச்சினை இருப்பதால் அவர் இந்த விவகாரத்தில் முடிவு எடுப்பதை தள்ளி போடலாம். அல்லது எடப்பாடி பழனிசாமி - வேலுமணி தரப்பில் யாராவது ஒருவருக்கு சாதகமாக முடிவு அறிவிக்கலாம். அதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான முடிவு வந்தால் கொறடா உத்தரவுப்படி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் த.வெ.க.வுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். அதனை மீறினால் கட்சி தாவல் தடை சட்டம் பாய்ந்து அவர்களின் எம்.எல்.ஏ. பதவி கூட பறிபோகும் நிலை வரலாம். ஒருவேளை வேலுமணிக்கு ஆதரவான முடிவு வந்தால், அவர்களில் பெரும்பாலானோர் த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்து வாக்களிப்பார்கள். அவர்களை தடுக்க முடியாது.

இந்த 2 அம்சங்கள் தவிர சபாநாயகர், எந்த முடிவும் எடுக்காமல் போனால் விதிப்படி, கட்சியின் கொறடா எடுக்கும் முடிவுக்கு எம்.எல்.ஏ.க்கள் கட்டுப்பட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயலாம். சிலர் அ.தி.மு.க.வை இரண்டு அணியாக பிரித்து செயல்பட வைக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஆனால் சட்ட நிபுணர்கள் ஒரு கட்சியை சபாநாயகர் இரண்டாகப் பிரிக்க முடியாது. அவர் "சட்டமன்றக் கட்சித் தலைவர்” மற்றும் “கொறடா" ஆகியோரை மட்டுமே அங்கீகரிக்க முடியும். கட்சியில் பிளவு ஏற்பட்டால், தேர்தல் ஆணையத்தின் முடிவே இறுதியானது என்று சொல்கின்றனர். மற்றொரு அம்சமாக, வேலுமணி தரப்புக்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அதாவது 32 எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைத்து த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தால், அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயாது.

சபாநாயகர் முடிவெடுப்பதில் காலதாமதம் செய்யலாம் என்பது நடைமுறையில் இருந்தாலும், சுப்ரீம் கோர்ட்டு பல வழக்குகளில் "நியாயமான காலத்திற்குள்" முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது நினைவுகூரத்தக்கது. சபாநாயகர் எடுக்க போகும் இந்த முடிவு, நாளை அ.தி.மு.க. தலைமை யார்? என்பதனை முடிவு செய்வதற்கும் அச்சாரமாக அமையலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com