அதிமுகவின் கொறடா யார்? - சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் விளக்கம்

பேரவை விதிகளின் படி முடிவு செய்யப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் கொறடா யார்? - சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் விளக்கம்
Published on

சென்னை,

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி என இரு தரப்பாக பிரிந்து, சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியை கைப்பற்ற போட்டியிடுகின்றனர். இதற்காக சபாநாயகரிடம் உரிமை கோரி 2 தரப்பினரும் ஏற்கனவே கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை, எடப்பாடி பழனிசாமி தரப்பில் எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சந்தித்து பேசினர். இதுகுறித்து கேட்டபோது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி யாரை கொறடா என குறிப்பிடுகிறாரோ அவரை தான் கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும். அதை சபாநாயகரிடம் தெளிவாகக் கூறி யுள்ளோம் என்று கூறினர். அதனைத் தொடர்ந்து வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர் சபாநாயகரைச் சந்தித்தனர்.

இந்நிலையில், அதிமுகவின் கொறடா நியமனம் தொடர்பாக இரு அணிகளும் தொடர்ந்து மனுக்களை அளித்து வருகின்றனர் என்றும் இரு தரப்பு மனுக்களும் ஆய்வில் உள்ளது, பேரவை விதிகளின் படி முடிவு செய்யப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com