ரஜினியை மிரட்டுவது யார்? அமைச்சர் ரகுபதி விளக்கம்

1996ல் திமுக ஆட்சி வர வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த் என அமைச்சர் ரகுபதி கூறினார்.
ரஜினியை மிரட்டுவது யார்? அமைச்சர் ரகுபதி விளக்கம்
Published on

நாமக்கல்,

தவெக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர நினைத்ததாகவும் ஆனால் திமுக அவருக்கு பல மிரட்டல்களை கொடுத்து அரசியலுக்கு வர விடாமல் செய்ததகாவும் கூறினார். நடிகர் ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜுனாவின் கருத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

இந்த நிலையில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது. யாருடைய மிரட்டலுக்கும் அவர் அடிபணியமாட்டார். ரஜினிகாந்தை திமுக, மிரட்டியதாக கூறுவது அப்பட்டமான பொய். அவர் எங்களது நண்பர். 1996ல் திமுக ஆட்சி வர வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த். அரசியல் ஆதாயத்திற்காக தவெகவினர் இவ்வாறு கூறுகின்றனர்.

கரூர் விவகாரத்தில், செந்தில் பாலாஜி பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அவர் எந்த தவறையும் செய்யவில்லை. அவருக்கு சிபிஐ சம்மன் கொடுத்திருப்பது திமுகவை மிரட்டி பார்க்கும் செயல். செந்தில் பாலாஜி தைரியமானவர். இதனை அவர் சட்டப்படி எதிர்கொள்வார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்கள் வேற வேலை எதுவும் இல்லாமல் கூறி வருகின்றன. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழகம் தான்.

மானாமதுரை சம்பவம் சிபிசிஐடி விசாரணைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. தவறு செய்த யாரையும் முதல்-அமைச்சர் காப்பாற்றமாட்டார். சிபிசிஐடி விசாரணையில் உண்மை தெரியும். அதிமுக ஆட்சியில் தினசரி எத்தனை லாக்கப் மரணங்கள் நடந்திருக்கிறட்து. என்பது யாருக்குமே தெரியாது. அந்தளவு மரணங்கள் நடந்திருக்கிறது.

2026-ல் நாங்கள் தான் ஜெயிக்க போகிறோம் என்பது எங்களுக்கு தெரிந்துவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தெரிந்துவிட்டது. அதனால் தான் அவர்கள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இழுத்துக்கொண்டே இருக்கின்றனர். தொகுதி உடன்பாடு கூட இன்னும் முடிவு எட்டவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் சேருகிறாரா என்பது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் மட்டுமே தெரிந்த வெளிச்சம் அது எங்களுக்கு தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com