

சென்னை,
இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சிகள் களம் காண்கின்றன.
சட்டசபை தேர்தல் முடிந்து 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த இடைத்தேர்தல் நடைபெறுவதால் புதிதாக ஆட்சி அமைத்துள்ள த.வெ.க.வுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். த.வெ.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் த.வெ.க. அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை அக்கட்சிக்கு ஆதரவளித்துள்ளன. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். த.வெ.க. அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் முதல்-அமைச்சர் விஜய் அரசின் செயல்பாட்டை அவ்வப்போது கண்டித்து வருகிறார்கள்.
சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் பதிலுரை மற்றும் உடல்மொழி குறித்து இரு கம்யூனிஸ்ட் செயலாளர்களும் கண்டனம் தெரிவித்தனர். த.வெ.க.வின் 5 ஆண்டு ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு அவர்களது நிலைப்பாட்டை பொருத்தே அது அமையும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ.சண்முகம் கருத்து கூறியிருந்தார்.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் 2 கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் வீரபாண்டியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அறிவிக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் அதிகம் இல்லை. தமிழகத்தில் 40 மாவட்டங்களில் இடதுசாரி கட்சிகளுக்கு வாக்குகள் உள்ளன. மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் போட்டியிடுவதா? அல்லது கூட்டணி கட்சியான த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பதா என்பது பற்றி நாளை (வெள்ளிக்கிழமை) மாலையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்வோம்.
இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். 2 இடதுசாரி கட்சிகளும் ஒருங்கிணைந்து நல்ல முடிவை எடுத்து அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.