

சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க. ஆட்சியமைத்து, அதன் தலைவர் விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து அக்கட்சியில் இணைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளை தினமும் ஏராளமானோர் தொடர்புகொண்டு கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வும் முன்னாள் டி.ஜி.பி.யுமான நட்ராஜ் ஆகியோர் என். ஆனந்த் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து பலர் அணியணியாக த.வெ.க.வில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.மேலும், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், பி. சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர்.
இந்நிலையில், அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், என்.ஆர். சிவபதி உள்ளிட்டோரும், முன்னாள் எம்.எல்.ஏ.க்களான பன்னீர்செல்வம், ராஜவர்மன், ஆர். சீனிவாசன், கோவிந்தசாமி, மான்ராஜ், சுந்தர்ராஜ், ராஜமுத்து ஆகியோரும், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ. கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று த.வெ.க.வில் இணைந்தனர்.பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பிரமாண்ட இணைப்பு நிகழ்ச்சியில், பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் அவர்களை வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, வெங்கட்ரமணன், விஜயலட்சுமி, விஜய் தமிழன் பார்த்திபன், ஸ்ரீநாத், மரியா வில்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அதிமுகவினர் தொடர்ச்சியாக தவெகவில் இணைந்து வருவது பற்றி அக்கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன் கூறியதாவது: - நல்லாட்சி தமிழகத்தில் தரவேண்டும். அதற்காக நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் வந்து இணைகிறார்கள் அது வரவேற்கதக்க ஒன்று. வருபவர்களை அரவணைத்து செல்வோம். அதிமுக நிலை இனி கேள்விக்குறியாகத்தான் இருக்கும்” என்றார்.