

சென்னை,
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெறித்து வருகிறது. அதிகபட்சமாக 108 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது. பகல் நேரங்களில் சாலைகளில் நடக்க முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. கோடை கால வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல வீடுகளில் பேன், ஏசி இல்லாமல் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது.
இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தங்களுடைய அதிருப்தியை பொதுமக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.
சென்னையை மட்டுமன்றி, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இது தமிழக மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து இந்த மின்தடைக்கு எதிராக மக்கள் குரல் கொடுத்தும் வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மின் வெட்டு ஏற்படுவதற்கான காரணம் குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், பீக் ஹவர்சில் உள்ளூர் மின் தேவை அதிகரிப்பால் ஏற்படும் "Fuse off Calls" முக்கிய காரணம் ஆகும். நிலத்தடி மின்கம்பிகள் பழுதுகள், ஜம்பர் கட், மின்கம்பி துண்டிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின்வெட்டு ஏற்படுகிறது. மின்வெட்டு பிரச்னைகளை விரைவாக சரி செய்ய மொபைல் பராமரிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மழை, காற்று, இடி போன்ற வானிலை காரணமாக மின்தடைகள் ஏற்படுகின்றன. அனைத்து மின்விநியோக வட்டங்களிலும் பணியில் எம்ஆர்டி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிக நுகர்வோர் சுமை, நகர வளர்ச்சி காரணமாக மீண்டும் மீண்டும் மின்தடை ஏற்படுகிறது. உயர்திறன் மின்மாற்றிகள் அமைத்தல், புதிய துணை மின்நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மின்தடைகளை சரி செய்ய 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தற்காலிக பணியாளர்கள் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.