

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆய்வு செய்து இந்துசமய அறநிலைய அமைச்சர் ரமேஷ், அர்ச்சகர்களை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள். தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை. இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!’ என்று தெரிவித்துள்ளார்.