

சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் தி.மு.க. சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மேயர் பிரியா பேசியதாவது;-
“கடந்த 5 ஆண்டுகளில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் பிறந்தநாள் விழாக்களின்போது தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடைபெறும். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க. என்றும் தூய்மை பணியாளர்களுடன் இருக்கும் என்பதற்கான உதாரணம்தான் இந்த நிகழ்ச்சி.
தமிழகத்தில் இன்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் தற்குறி கூட்டம், கவர்ச்சியால் வெற்றி பெற்றார்கள் என்று சொல்கிறார்கள். வேறு எதை வைத்து அவர்கள் வெற்றி பெற்றார்கள்? வேறு என்ன களப்பணியை அவர்கள் செய்திருக்கிறார்கள்?
முதல் முறையாக ஆட்சியை அமைத்திருக்கிறார்கள். அவர்கள்தான் இப்போது ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது தெரியாமல், இன்றைக்கும் தி.மு.க.வை தொடர்ந்து குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆட்சி அமைத்து இத்தனை நாட்கள் ஆகியும் எந்த அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை.
கடந்த முறை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, கொரோனா காலகட்டத்தில் கூட மருத்துவமனைக்கு நேரில் சென்று பொறுப்புடன், அக்கறையுடன் செயல்பட்டார். ஆனால் இன்று ஆட்சி அமைத்துவிட்டு, அவர்களின் அமைச்சர்கள் எல்லா துறைகளிலும் இருந்தாலும் கூட, அனைத்திற்கும் தி.மு.க. மீது பழி போடுகிறார்கள்.
தி.மு.க.வை குறை சொல்வதற்கு நீங்கள் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்? எதற்காக அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறீர்கள்? ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க. என்றும் மக்களுடன் இருக்கும், மக்களும் தி.மு.க.வுடன் இருப்பார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.