

சென்னை,
திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் துரைமுருகன் வருவதற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. இந்நிலையில், தாமதமாக வந்த பொதுச்செயலாளர் துரைமுருகனை வரவேற்க மகளிர் அணியினர் உட்பட யாருமே வெளியே வரவில்லை என்று ஊடகங்கள் செய்திகள் வெளியாகின. அத்துடன் கட்சி நிகழ்ச்சிக்கு உள்ளே செல்லாமல், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளே இருந்த நிலையில், சோகமான முகத்துடன் துரைமுருகன் விரக்தியில் திரும்பிச் சென்றிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் பரவின.
இதனை மறுத்து திமுக ஐடி விங்க் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்கள் குறித்து, சில செய்தி ஊடகங்களில் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் முற்றிலும் உண்மைக்கு முரணான அவதூறு செய்திகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
டாக்டர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரில், தொற்று ஏற்படுவதை தவிர்க்க அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைக் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தற்போது தவிர்த்து வருகிறார். இதன் அடிப்படையிலேயே, தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த அவர், அலுவலகப் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை மட்டும் பார்வையிட்டுவிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டு சென்றார்.
காணொளிகளை வெட்டி ஒட்டி, தாமாகவே ஒரு பொய்க் கதையை உருவாக்கி செய்தியாக வெளியிடுவது மிகவும் கீழ்த்தரமான செயலாகும். நடைபெறாத ஒரு விஷயத்தைத் திணித்து, இது போன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை இட்டுக்கட்டி வெளியிடுவதை ஊடகங்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஊடக தர்மத்திற்கு எதிரான இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அளித்துள்ள விளக்கத்தில், கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.