தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா லண்டன் செல்லாதது ஏன்? - வெளியான தகவல்

அறுவை சிகிச்சைக்காக அமைச்சர் கீர்த்தனா கடந்த 10-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா லண்டன் செல்லாதது ஏன்? - வெளியான தகவல்
Published on

சென்னை,

தமிழக முதல் அமைச்சர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாட்கள் அரசு முறைப் பயணமாக கடந்த 10-ந்தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து 12-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய், தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைப்பதற்காக, உலகப்புகழ் பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் உள்ள உள்கட்டமைப்பு, பந்தய சுற்றுப்பாதை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போட்டிகளை வணிக ரீதியாக நடத்தும் முறைகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதலீடுகள் ஈர்ப்பு

அதன் தொடர்ச்சியாக 2 நாட்கள் முதல்-அமைச்சர் விஜய், பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்தார். முதல்-அமைச்சரின் லண்டனத்தில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும், அதன் மூலம் தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.

எதிர்க்கட்சியினர் கேள்வி

இதனிடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணத்தில் தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஏன் முதல்-அமைச்சருடன் செல்லவில்லை? என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா லண்டன் செல்லாதது ஏன்? என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அறுவை சிகிச்சை

தொழில்துறை அமைச்சராக உள்ள கீர்த்தனாவுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக சில வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலமாக 'பிளேட்' (எலும்புகளை இணைக்க பொருத்தப்படும் இரும்பு தகடு) பொருத்தப்பட்டிருந்தது. இது அவருக்கு சமீப காலங்களாக சிக்கலை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கடந்த 7-ந்தேதி பரிசோதனைக்காக சென்றார். அப்போது அவருடைய உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் 'பிளேட்'டை விரைவாக அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதன்படி கடந்த 10-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் கீர்த்தனா, அறுவை சிகிச்சை முடிந்து 2 நாட்களுக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த தகவல்களை கவுண்டம்பாளையம் த.வெ.க. எம்.எல்.ஏ. கனிமொழி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து விளக்கம் அளித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com