சீமானின் மகளுக்கு சீர்கொண்டு சென்றது ஏன்? - அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்

சீமானின் மகளுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் சீர் கொடுத்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது
சீமானின் மகளுக்கு சீர்கொண்டு சென்றது ஏன்? - அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்
Published on

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு சீமான் - கயல்விழி தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவது முறையாக தந்தையான சீமானை அரசியல் பிரமுகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் நாதக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் சீமானின் 2-வது பெண் குழந்தைக்கு முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று சீர் கொண்டு சென்றார். தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, பல தாம்பூல தட்டுகளில் பல வகையான பொருட்களுடன் சீர் எடுத்து வந்தார். மேளதாள வாத்தியங்கள் முழங்க சீர் கொண்டு வந்த அனிதா ராதாகிருஷ்ணனை சீமான் தனது வீட்டின் வெளியே வந்து வரவேற்று அழைத்து சென்றார்.

இதையடுத்து சீமானின் மகளுக்கு தனது கையாலேயே தங்க செயினை அணிவித்து அனிதா ராதாகிருஷ்ணன் மகிழ்ந்தார். சீமானின் மகளுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் சீர் கொண்டு வந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்து கூறியதாவது:-

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பக்ரீத் பண்டிகைக்கு மாடு வெட்ட ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது, இதையெல்லாம் த. வெ.கவுக்கு வாக்களித்த இஸ்லாமியர்கள் உணர வேண்டும். இஸ்லாமியர்கள் எப்போதும் திமுகவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். கனிமவளங்களை தமிழக பயன்பாட்டிற்காக ரசீதுடன் கொண்டு செல்லும் லாரிகளை அனுமதிக்க வேண்டும்.

சீமான் மனைவி கயல்விழியின் தந்தையான காளிமுத்து அண்ணனோடு சிறு வயதில் இருந்தே எனக்கு பழக்கம். அவரை பார்த்து வளர்ந்தவன் நான். கயல்விழியும் எனக்கு தங்கை தான். அவர் சின்ன பிள்ளையாக இருக்கும்போதே எனக்கு தெரியும். அவருக்கு பெண் குழந்தை `காளி’ பிறந்திருக்கிறது. அதை உலகிற்கே தெரியப்படுத்தவே ஒரு அண்ணனாக சீர் கொண்டுசென்றேன். மக்கள் அனைவரும் வாழ்த்தினார்கள். எங்கள் தலைவரும் வாழ்த்தினார். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com