வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ஏன் மீண்டும் உயர்த்தினீர்கள்? - மாணிக்கம் தாகூர்

சிலிண்டர் விலையை உடனே திரும்பப் பெறுங்கள் என மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
மாணிக்கம் தாகூர்
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டுக்கு உரையாற்றுகிறார். ஆனால் மக்கள் கேட்கும் கேள்வி ஒன்றுதான்: வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ஏன் மீண்டும் ரூ.30 உயர்த்தினீர்கள்?

சிலிண்டர் விலை உயர்வு

சென்னையில் ரூ.928.50 ஆக இருந்த சிலிண்டர் விலை இன்று ரூ.957.50 ஆக உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டது.

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலைவாய்ப்பு நெருக்கடி, விவசாயிகளின் பிரச்சினைகள், நடுத்தர மக்களின் பொருளாதார சுமை ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சமையலறையில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையை உயர்த்துவது ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

செலவுகள் அதிகரிப்பு

2014-ல் ஆட்சிக்கு வந்தபோது “Achedin “என்று வாக்குறுதி அளித்த பாஜக அரசு, இன்று ஒவ்வொரு குடும்பத்தின் மாதச் செலவையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மக்களின் வரிப்பணமும், விலைவாசி உயர்வின் சுமையும் சாதாரண குடும்பங்களின் தோளில் ஏற்றப்படுகின்றன. அதே நேரத்தில் பெரும் கார்ப்பரேட் குழுமங்களுக்கு அரசு காட்டும் சலுகைகள் குறித்து நாடு முழுவதும் கேள்விகள் எழுந்து வருகின்றன.

திரும்பப் பெறுங்கள்

மோடியே, இன்று மன் கி பாத் பேசுவதற்கு முன், மக்களின் பாதையைப் பாருங்கள். காலியான சமையலறைகளைப் பாருங்கள். உயர்ந்த விலைவாசியால் தவிக்கும் குடும்பங்களைப் பாருங்கள்.

மன் கி பாத் அல்ல, ஜன கி பாத் கேளுங்கள்.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com