விஜய் கரூரில் களத்தில் நிற்காதது ஏன்? - ஆ.ராசா கேள்வி

செய்தி அறிந்த பிறகும் களத்தில் நிற்காமல், அவசரவசரமாக ஏன் சென்னைக்கு வந்தீர்கள்? என திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
கரூர் துயர சம்பவம் நடந்து இரண்டு நாட்களை கடந்துவிட்ட போதிலும் இன்னமும் ஒரு தவெக நிர்வாகிகள் கூட பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை. இந்த நிலையில் திமுக எம்பி ஆ ராசா, நம்மால் தான் இது நடந்துள்ளது என்று அவர்கள் மனதிற்கு தெரிந்துள்ளது என்ற குற்ற உணர்ச்சியால் தால் கரூருக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். சென்னை அறிவாலயத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
திமுகவில் முன்பு ஒரு பேரணியில் கலவரம் ஏற்பட்டது. ஆனால் அப்போது எதையும் பொருட்படுத்தாமல் கலைஞர் கருணாநிதி சம்பவ இடத்துக்கு நேரில் சென்றார். இதேபோல் கொரோனா காலத்திலும் மக்களுக்காக ஒன்றிணைவோம் என்ற பெயரில் ஒரு முழக்கத்தை எழுப்பி, பொதுமக்களுக்கு எல்லாவற்றையும் வழங்கியவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இப்படித்தான் மக்களுக்கு ஒரு ஆபத்து என்றால் களத்தில் சென்று நின்று மக்களுக்கு உறுதுணையாக இருப்பது தான் திமுக. அப்படித்தான் இப்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திலும் கூட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னின்று செய்திருக்கிறார். இதில் எந்த அரசியலும் கிடையாது. ஆனால் எனக்கு இதில் தனிப்பட்ட முறையில் சில கேள்விகள் இருக்கின்றன.
இப்படி ஒரு துயர சம்பவம் நடந்த பிறகும் கூட ஏன் களத்தில் நிற்க வேண்டிய தலைவர்கள் ஒருவர் கூட இல்லை. செய்தி அறிந்த பிறகும், செய்தியாளர் சந்திப்பதற்கு கூட வெட்கப்பட்டுக்கொண்டு, பயந்துகொண்டு ஏன் சென்னைக்கு வந்தீர்கள்.. ஒன்றை என்னால் உணர முடிகிறது. பிரபலமான நடிகர் அவர்.. அவர் வந்தால் கூட்டம் கூடும். சென்னைக்கு செல்லாமல் திருச்சியில் இருந்துகொண்டு, இப்போது டுவீட் போடுகிறார்களே அவர்களை எல்லாம் பார்க்க சொல்லியிருக்கலாமே.
அவர்களது காயத்துக்கு ஆறுதல் சொல்லி, நிவாரணம் கொடுத்து இருக்கலாம். நம்மால் தான் இது நடந்துள்ளது என்று அவர்கள் மனதிற்கு தெரிந்துள்ளது. குற்ற உணர்வு இருப்பதால் தான் ஓடி ஒளிந்தது உண்மை. ஏன் சென்னையில் வந்து ஒளிந்துகொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் செல்ல வேண்டாம்.. கரூர் பக்கத்து மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், மாநில தலைவர் யாராவது சென்று பார்த்திருக்கலாமே.. யாரும் செல்லாமல் இருப்பதற்கு குற்ற உணர்ச்சி இருப்பது என்று தானே பொருள்.
இங்கு ஒரு புரட்சி நடக்க வேண்டும் என்று டுவீட் பதிவில் சொல்கிறார். இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக, ஒருமைப்பாட்டுக்கு எதிராக டுவீட் போட்டுவிட்டு அதற்கு விமர்சனம் வந்ததும் எடுத்துவிடுகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்த பதிவை எடுக்கிற அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் உணர்வோடு இருக்கிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இந்த பதிவை போட்டவரை கட்சியில் இருந்து அதன் தலைவர் நீக்கியிருக்கிறாரா.. அவரை அந்த பதிவை நீக்கச் சொல்லியாவது கூறியிருக்கிறாரா?
இவ்வாறு அவர் கூறினார்.






