தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி

அமைதியைச் சீர்குலைக்கத் துடிக்கும் முஸ்தபாவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி
Published on

சென்னை,

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா அண்மையில் 'அமரன்' திரைப்படம் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. பாரதத் தாயின் மண்ணைக் காக்கத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர வரலாற்றைப் போற்றும் 'அமரன்' திரைப்படத்தை, ஏதோ ஒரு சமூகத்திற்கு எதிரானது போலச் சித்தரிக்க முயலும் முஸ்தபாவின் வஞ்சக அரசியல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றிய உண்மைக்கதையைப் படமாக எடுத்தால், அது எப்படி இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக அமையும்?. ஒரு பயங்கரவாதி தண்டிக்கப்படுவதை முஸ்தபா ஏன் சகித்துக்கொள்ள மறுக்கிறார்?. பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டு ஒரு இந்தியக் குடிமகனுக்கு மகிழ்ச்சிதான் ஏற்பட வேண்டுமே தவிர, முஸ்தபாவைப் போலக் கண்ணீர் வரக்கூடாது. உங்களது அனுதாபம் இந்திய ராணுவத்திற்கா அல்லது எல்லையைத் தாண்டி வரும் பயங்கரவாதிகளுக்கா?.

மேலும், முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'துப்பாக்கி' திரைப்படத்திலும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகளை நீக்க வைத்ததாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார் முஸ்தபா. திரையில் தீவிரவாதி தண்டிக்கப்படுவதை ஒரு சமூகத்திற்கு எதிரானதாகக் காட்டி, தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கத் துடிக்கும் முஸ்தபாவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.

முஸ்தபா போன்றவர்களின் இத்தகைய நச்சுப் பேச்சுக்களை முதல்-அமைச்சர் விஜய் உடனடியாகக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில், இதுதான் தவெகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்பதாக தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com