'ஷாக்' அடிக்கும் விலையில் மின்சாரம் வாங்கும் நிலை தமிழகத்திற்கு வந்தது ஏன்? - பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
'ஷாக்' அடிக்கும் விலையில் மின்சாரம் வாங்கும் நிலை தமிழகத்திற்கு வந்தது ஏன்? - பரபரப்பு தகவல்கள்
Published on: 

சென்னை,

'ஷாக்' அடிக்கும் விலையில் மின்சாரம் வாங்கும் நிலை தமிழகத்திற்கு வந்தது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின் தேவை அதிகரிப்பு

தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 19,500 மெகாவாட் மின்சாரம் தேவையாக உள்ளது. இது கோடை காலத்தில் 21,700 மெகாவாட்டாக அதிகரித்துவிடுகிறது. தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க வேண்டிய காலம். ஆனால், எல்-நினோ தாக்கத்தால் இப்போதே கோடை காலத்தில் சுட்டெரிப்பதை போல் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், மின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் ரூ.7 கோடி கூடுதல் செலவு

ஆனால், மின் உற்பத்தி என்பது சுமார் 5,300 மெகாவாட் என்ற அளவிலேயே உள்ளது. இதனால், மின் தேவையை சமாளிக்க மத்திய தொகுப்பில் இருந்தும், திறந்தவெளி மின் சந்தையில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

அந்த வகையில், தற்போது ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டை சமாளிக்க, ஒவ்வொரு நாளும் 1,000 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. அதுவும், ரூ.35 விலையில் ஒரு யூனிட் மின்சாரம் வாங்க வேண்டிய நிலை உள்ளதால், ஒவ்வொரு நாளும் ரூ.7 கோடி அளவுக்கு கூடுதல் செலவு ஏற்படும் அபாயம் உள்ளது.

த.வெ.க. அரசுக்கு கடும் எதிர்ப்பு

தமிழக மின்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச விலை இது என்பதால், கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவிலேயே இவ்வளவு விலைக்கு மின்சாரம் வாங்கப்போகும் ஒரே மாநிலம் தமிழகம் தான். ஆந்திரா இதே காலத்திற்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.16 முதல் ரூ.20 வரை மட்டுமே வாங்கியுள்ளது.

கடந்த கால தி.மு.க. ஆட்சியில் (2009-2010) ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.74 முதல் ரூ.6.75 விலையிலும், அ.தி.மு.க. ஆட்சியில் (2011-2014) ஒரு யூனிட் மின்சாரம் ரூ.12.50 என்ற விலையிலும், 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.8.15 என்ற விலையிலும், 2023-2024-ம் ஆண்டு ரூ.17.65 என்ற விலையிலும் வாங்கப்பட்டுள்ளது.

கூடுதல் விலை கொடுக்க வேண்டிய நிலை ஏன்?

கடந்த கால மின்சார கொள்முதல் வரலாறு இவ்வாறு இருக்க, புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. ஆட்சியில் ரூ.35 விலையில் ஒரு யூனிட் மின்சாரம் வாங்குவது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சரி.. இவ்வாறு அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலைமை ஏன் வந்தது என்ற கேள்வி எல்லோரது மனதிலும் எழலாம். அண்டை மாநிலமான ஆந்திராவில் அக்டோபர் மாத கூடுதல் மின் தேவைக்கு செப்டம்பர் 9-ந் தேதியே டெண்டர் விட்டு, ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.16 முதல் ரூ.20 வரை என்ற விலையில் கொள்முதல் செய்ய தொடங்கிவிட்டது.

தாமதமாக டெண்டர்

ஆனால், தமிழகமோ வடகிழக்கு பருவமழை தொடங்கிவிடும் என்ற நம்பிக்கையில், கூடுதல் மின் தேவை ஏற்படாது என்று கருதியது. ஆனால், நிலைமை மோசமானதால், மிகவும் தாமதமாக கடந்த வாரம்தான் மின் கொள்முதலுக்கு டெண்டர் விட்டது. இவ்வாறு கடைசி நேரத்தில் மின்சாரம் வாங்கும்போது, அதிக விலை கொடுப்பதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அதுவும் நாம் இப்போது வாங்க இருப்பது கேஸ் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம். அதன் உற்பத்தி விலையே ரூ.30-க்கு மேல் இருக்கிறது என்பதால், வாங்கும்போது கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளது.

முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தால்...

ஏற்கனவே, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம், பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. காற்றாலை மின்சாரமும் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. இதனால், கூடுதல் விலை கொடுத்து கேஸ் மின்சாரம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனால், இதை முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தால், ரூ.20 விலையில் ஒரு யூனிட் மின்சாரத்தை வாங்கியிருக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நிபுணர்கள் சொல்வது என்ன?

மேலும் அவர்கள் கூறுகையில், "குறுகிய கால கொள்முதலை நம்பாமல், நீண்ட கால ஒப்பந்தம் (25 ஆண்டு), சொந்த அனல் மின் உற்பத்தியை 70 சதவீதமாக உயர்த்துதல், சோலார் மற்றும் பேட்டரி சேமிப்பு திட்டங்களை விரைவுபடுத்தினால் மட்டுமே அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை தவிர்க்க முடியும்" என்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com