

சென்னை,
பைக் ரேஸை தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னை நகரின் முக்கியச் சாலைகளில் நள்ளிரவு நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு, அதிவேகமாகப் பைக்குகளை ஓட்டியும், வீலிங் உள்ளிட்ட ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டும் பொதுமக்களை அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட தலைநகரின் மையப் பகுதிகளில் இத்தகைய அத்துமீறல்கள் நடைபெற்றபோது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவல்துறை எங்கே இருந்தது.
மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளத் தாங்களே சாலையில் தடுப்புகளை அமைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறதே. இது சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தின் தோல்வியல்லவா. இந்தச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பைக் சாகசங்கள் ஏற்கனவே உயிரிழப்புகளுக்குக் காரணமாகி வரும் நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோன பிறகுதான் அரசு விழித்துக் கொள்ளப்போகிறது. மேலும், கைது செய்யப்பட்டவர்களில் சிலரிடம் கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த கவலைக்குரியது.
இது வெறும் பைக் ரேஸ் பிரச்சனையா. போதைப்பொருள் பழக்கமும் அதிவேகச் சாகசமும் ஒன்றோடொன்று இணைந்துள்ளதா. இளைஞர்களைக் குறிவைத்துச் செயல்படும் போதைப்பொருள் வலையமைப்பின் பின்னணி என்ன. பைக் ரேஸ் குழுக்களுக்கும் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கும் தொடர்பு உள்ளதா. இந்தக் கேள்விகளுக்குக் காவல்துறை வெறும் கைது நடவடிக்கைகளால் மட்டும் பதிலளித்துவிட முடியாது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள முழு வலையமைப்பையும் கண்டறிந்து, அதன் மூலத்தை முற்றிலுமாகத் துண்டிக்க வேண்டும்.
சாலைகள் சாகசக் காட்சிகளுக்கான அரங்கமா. பொதுமக்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாத அளவுக்கு இரவு நேரக் கண்காணிப்பு பலவீனமாகிவிட்டதா. பைக் ரேஸ் நடைபெறுவது தெரிந்தும் முன்கூட்டியே தடுக்காதது ஏன்?
தமிழ்நாடு அரசு, குறிப்பாகச் சென்னை மாநகரக் காவல்துறை, இதை ஒரு சாதாரணப் போக்குவரத்து விதிமீறலாகக் கருதாமல், இளைஞர்களின் உயிர், பொதுமக்களின் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, சட்டம்-ஒழுங்கு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தீவிரப் பிரச்சனையாக அணுக வேண்டும்.
பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்லாது, அவர்களை ஒருங்கிணைப்பவர்கள், ஊக்குவிப்பவர்கள், வாகனங்களை ஏற்பாடு செய்பவர்கள், போதைப்பொருள் வழங்குபவர்கள் என முழுச் சங்கிலியையும் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.