தமிழகம் முழுவதும் பரவலாக மழை - கோடை வெப்பம் சற்று தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழகம் முழுவதும் பரவலாக இன்று மழை பெய்தது இதனால் கோடை வெப்பம் சற்று தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அதிகரிக்க தொடங்கியது. ஒவ்வொரு நாளும் வெயிலின் கோரத்தாண்டவத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை பிற்பகல் நேரங்களில் தவிர்த்து வந்தனர். அதிலும் கடந்த மாதம் இறுதியில் இயல்பை விட வெப்பத்தின் அளவு அதிகமாக பதிவானது.

வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே சாரல் மழை முதல் லேசான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரையிலான 4 நாட்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று காலையில் விருகம்பாக்கம், சாலிகிராமம் , கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதைபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, கொத்தமங்கலம், சேந்தன்குடி, கீரமங்கலம், ஆலங்குடி, வடகாடு, விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், உறையூர், பொன்மலை, மன்னார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை சுமார் 30 நிமிடம் மழை பெய்தது. அதைபோல கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து 2 வது நாளாக இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவியது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்தது.

கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று பரவலாக பெய்த மழையால் கோடை வெப்பம் சற்று தணிந்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com