காதல் கணவரை பிரித்த இளம்பெண் மீது சாணத்தை கரைத்து ஊற்றிய மனைவி - 3 பேர் மீது வழக்குப்பதிவு

அவரது கணவருக்கு 20 வயதான இளம்பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அபிநயா, கவியரசன், அருணாதேவி
அபிநயா, கவியரசன், அருணாதேவி
Published on: 

காரைக்குடி,

காதல் கணவரை பிரித்த இளம்பெண் மீது சாணத்தை கரைத்து ஊற்றிய மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்ஸ்டாகிராம் பிரபலம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் அபிநயா (வயது 30). இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர். இவருக்கும், கல்லல் அருகே ஏழுமாப்பட்டி கிராமத்தை சேர்ந்த மற்றொரு இன்ஸ்டாகிராம் பிரபலமான கவியரசன் (35) என்பவருக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாகி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

வாக்குவாதம்

இந்நிலையில் கவியரசனுக்கு காரைக்குடியை சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கவியரசன் தனது மனைவி அபிநயாவை விட்டுவிட்டு அந்த இளம்பெண்ணுடன் நெருங்கி பழகி வந்தாராம். இதை அறிந்த அபிநயா, தனது கணவர் பிரிவதற்கு அந்த இளம்பெண்தான் காரணம் என்று நினைத்து, அந்த பெண் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காரைக்குடி 100 அடி சாலையில் அபிநயா தனது சகோதரி அருணாதேவி (27), தோழி பிரியா (30) ஆகியோருடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு அந்த இளம்பெண் செல்வதை கண்ட, 3 பேரும் அந்த இளம்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாணத்தை கரைத்து ஊற்றி..

இந்த வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறிய நிலையில் அபிநயா, அருணாதேவி, பிரியா ஆகியோர் தாங்கள் கொண்டு வந்த துடைப்பத்தை வைத்து அந்த இளம் பெண்ணை தாக்கி உள்ளனர். சாணத்தை எடுத்து வந்து கரைத்து அந்த இளம்பெண் மீது ஊற்றிவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து அந்த இளம்பெண், காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் விசாரணை நடத்தி அபிநயா, அவரது சகோதரி அருணாதேவி. தோழி பிரியா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். மேலும் கவியரசனை நேரில் அழைத்து சமூகவலைத்தளம் மூலம் வேறு ஏதாவது பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளாரா? எனவும் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com