

சென்னை,
சென்னை பாலவாக்கத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர், தனது இரண்டரை வயது குழந்தையை அண்ணனிடம் ஒப்படைத்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (வயது 38). இவருக்கும் முத்து பிரியா (வயது 33) என்ற பி.எஸ்சி பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டரை வயதில் திருவென்பா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பிறகு, முத்து பிரியா தன்னை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி விவேக் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதற்கிடையே, விவேக் கடந்த 3 மாதங்களாக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் அவர் முறையாக மாத்திரைகளை உட்கொள்ளவில்லை.
இந்நிலையில், இன்று ( வெள்ளிக்கிழமை) அதிகாலை தம்பதியரிடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற விவேக், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து முத்து பிரியாவை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முத்து பிரியா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி இறந்ததை உணர்ந்த விவேக், தங்களது இரண்டரை வயது பெண் குழந்தையை செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காட்டில் உள்ள தனது அண்ணன் வினோத்திடம் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார். குழந்தையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.
அதன் பின்னர், விவேக் நேராக நீலாங்கரை காவல் நிலையத்திற்குச் சென்று, தான் மனைவியைக் கொலை செய்த விபரத்தைக் கூறி போலீசாரிடம் சரணடைந்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முத்து பிரியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விவேக்கை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.