

நீலகிரி,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை, 9-வது மைல், கூவச்சோலை, விலங்கூர், பிதிர்காடு, சூசம்பாடி, முதிரக்கொல்லி, முக்கட்டி, சோலாடி உள்பட பல பகுதிகள் வனத்தையொட்டி உள்ளன. இதனால் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் மேற்கண்ட பகுதிகளுக்குள் உணவு, தண்ணீர் தேடி புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதில் குறிப்பாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒற்றை காட்டுயானை நெலாக்கோட்டையில் கடைகளை முற்றுகையிட்டு, பின்னர் சாலையில் நின்று வாகனங்களை வழிமறித்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று காலையும் அதே சாலைக்கு காட்டு யானை வந்து வழிமறித்தவாறு சுற்றித் திரிந்தது. இதனால் கூடலூர் - கேரளம் மாநிலம் சுல்தான்பத்தேரி இடையே சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி அறிந்த பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் சுதீர் மற்றும் வனத்துறையினர் வாகனத்தில் விரைந்து வந்து காட்டு யானையை பார்வையிட்டனர். தொடர்ந்து யானையை அங்கிருந்து வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுப்பட்டனர். இதனால் யானை திடீரென ஆக்ரோஷமடைந்து வனத்துறை வாகனத்தை நோக்கி வந்தது. தொடர்ந்து வாகனத்தின் முன்பகுதியை தந்தத்தால் குத்தி சேதப்படுத்தியது.
அப்போது வாகனத்தை டிரைவர் பின்நோக்கி இயக்கினார். மேலும் வனத்துறையினர் சிலர் கீழே இறங்கி ஓடி நூலிழையில் உயிர் தப்பினர். இதையடுத்து அங்கிருந்து காட்டு யானை விலகி சென்றது. பின்னர் வனத்துறையினர் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்து, தொடர்ந்து அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.