குன்னூர் பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் முகாம் - வனத்துறை எச்சரிக்கை

காட்டு யானைகளை கண்டால் அருகில் சென்று வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரண்ணிமேடு மற்றும் கிளன்டேல் தேயிலை தோட்டப் பகுதிகளில், குட்டியுடன் கூடிய காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் பணியாற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என குன்னூர் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

சமவெளிப் பகுதிகளான மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், சிறுமுகை உள்ளிட்ட இடங்களில் கடும் வெயில் காரணமாக வறட்சி நிலவி வருவதால், உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலை மாவட்டமான நீலகிரிக்குள் வருவது வழக்கமான நிகழ்வாகும். இந்த நிலையில், ரண்ணிமேடு மற்றும் கிளன்டேல் தேயிலை தோட்டங்களில் குட்டியுடன் சுமார் 11 காட்டு யானைகள் முகாமிட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இரவு மற்றும் பகல் நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காட்டு யானைகளை கண்டால் அருகில் சென்று வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும், அவற்றை தொந்தரவு செய்யாதீர்கள் என்றும் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com