சத்தியமங்கலம் அருகே வாகனங்களை துரத்திய காட்டு யானை: பதறிய வாகன ஓட்டிகள்

சத்தியமங்கலம் அருகே வாகனங்களை துரத்திய காட்டு யானை: பதறிய வாகன ஓட்டிகள்

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் காட்டுயானை ஒன்று வெளியேறியது. இந்த காட்டு யானை ஆசனூர்- கேர்மாளம் சாலைக்கு வந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை காட்டு யானை வழிமறித்தது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை பின்னோக்கி இயக்கினர். எனினும் காட்டு யானை விலகி செல்லாமல் வாகனங்களை நோக்கி சென்றது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்தனர்.

எனினும், வாகன ஓட்டிகளை யானை எந்தவித தொந்தரவும் செய்யாமல் வாகனத்தின் பின் பகுதியில் உணவுப்பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா? என துதிக்கையால் தேடிப்பார்த்தது. உணவுப்பொருட்கள் இல்லாததால் சிறிது நேரம் வரை சாலையில் உலா வந்த காட்டு யானை, பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com