வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு


வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு
x

வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

கோவை,

கோவையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கிருந்து 7-வது மலையில் சுயம்புவாக தோன்றிய சிவனை தரிசிக்க வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.

அதன்படி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மீதம் ஆகும் உணவு ஆங்காங்கே கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள், கோவில் வளாகத்தில் உள்ள உணவு கூடத்தில் இருந்த பொருட்களை தின்றும், அங்குள்ள கடைகளை சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்து வருகின்றன.

இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. கோவில் வளாகத்துக்கு வரும் காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். யானைகள் வருவதை தடுக்க கோவிலை சுற்றி பெரிய அகழி தோண்டி தடுப்பு ஏற்படுத்தினர். ஆனாலும் காட்டு யானைகள் வருவது தொடர் கதையாக உள்ளது.

இந்த நிலையில், இன்று காலை வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் காட்டு யானை ஒன்று திடீரென புகுந்தது. யானை வந்ததை கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் யானை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் யானை அங்கிருந்து செல்லாமல் கோவிலுக்குள்ளேயே உலாவியது. யானை யாரையும் தாக்கவோ, விரட்டவும் செய்யவில்லை. சிறிது நேரம் உலாவியபின் மீண்டும் வந்த வழியாகவே யானை வெளியே சென்றது.

இதனையடுத்து வனத்துறையினர் மீண்டும் யானை கோவில் வளாகத்திற்கு வராமல் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடுகளை செய்தனர். இதனால் அப்பக்குதியி சிறிது பரபரப்பு நிலவியது.

1 More update

Next Story