கூடலூர் தொரப்பள்ளி காபி தோட்டத்தில் இறந்து கிடந்த காட்டு யானை

காட்டு யானை இறந்து கிடந்த கிணற்றின் அருகே மோட்டார் மற்றும் மின் வயர்கள் இருந்தது.
கூடலூர் தொரப்பள்ளி காபி தோட்டத்தில் இறந்து கிடந்த காட்டு யானை
Published on

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி மற்றும் முதுமலை புலிகள் காப்பக எல்லை பகுதிகள் இணையும் இடத்தில் தொரப்பள்ளி, குனில்வயல், முளப்பள்ளி, ஏச்சம் வயல் உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது. முதுமலை வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் மாலை அல்லது இரவில் வெளியேறி கிராமங்களுக்குள் நுழைந்து விவசாய பயிர்களை தினமும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கூடலூர் தொரப்பள்ளி குன்னு பகுதியை சேர்ந்த மத்தாய் என்பவரது காபி தோட்டத்தில் உள்ள கிணற்றின் மீது நேற்று காலை 8 மணி அளவில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் தேவராஜ், வனச்சரகர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது இரவில் அப்பகுதிக்கு வந்த காட்டு யானை 15 அடி ஆழ கிணற்றின் மீது இறந்து கிடப்பது தெரியவந்தது.

வனத்துறையினர் விசாரணை

இதுதொடர்பாக அப்பகுதி மக்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்திய போது. காட்டு யானை தடுமாறி கிணற்றின் மீது விழுந்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் காட்டு யானை இறந்து கிடந்த கிணற்றின் அருகே மோட்டார் மற்றும் மின் வயர்கள் இருந்தது. இதே போல் சற்று தொலைவில் சோலார் மின்வேலி பொருத்தப்பட்டிருந்தது. இதனால் மின்சாரம் தாக்கி காட்டு யானை இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து கூடலூர் வனத்துறையினர் கூறும்போது. 13 வயதான ஆண் காட்டு யானை இறந்து கிடந்த இடத்தின் அருகே மின் வேலி உள்ளது. இதனால் தடுமாறி விழுந்து அடிபட்டு இறந்ததா அல்லது மின்சாரம் பாய்ந்து இறந்ததா என பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவரும் என்றனர். இதனிடையே முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com