கூடலூர்: வீட்டின் முன்பு கிடந்த டயரை வைத்து விளையாடிய காட்டு யானை - வீடியோ வைரல்

டயரை தூக்கி வீசியும், கால்பந்து விளையாடுவது போல் உதைத்தும் காட்டு யானை விளையாடியது.
கூடலூர்: வீட்டின் முன்பு கிடந்த டயரை வைத்து விளையாடிய காட்டு யானை - வீடியோ வைரல்
Published on: 

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் மாக்கமூலா பகுதியில் பல மாதங்களாக காட்டு யானைகள் ஊருக்குள் முகாமிட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டு யானை ஒன்று திடீரென அப்பகுதிக்கு வந்தது. அங்குள்ள ஒரு மூதாட்டியின் வீட்டு முன்பு நுழைந்தது. பின்னர் காட்டு யானை உணவு தேடி வீட்டின் முன்பு அங்கும், இங்குமாக சென்றது.

அப்போது வீட்டின் பக்கவாட்டு பகுதியில் பழைய டயர் ஒன்று யானையின் துதிக்கையில் பட்டது. பின்னர் அந்த டயரை உருட்டிவிட்டும், தூக்கி வீசியும், கால்பந்து விளையாடுவது போல் உதைத்தும் காட்டு யானை விளையாடியது. இந்த சமயத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி, சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக வெளியே எட்டி பார்த்தார்.

அப்போது காட்டு யானை டயரை வைத்து விளையாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரத்தில் காட்டு யானை அங்கிருந்து சென்றுவிடும் என மூதாட்டி பீதியில் வீட்டுக்குள் முடங்கி இருந்தார். ஆனால், காட்டு யானை 2 மணி நேரத்துக்கும் மேலாக டயரை வைத்து விளையாடியது.

பின்னர் அந்த மூதாட்டி இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே 2 மணி நேர விளையாட்டுக்கு பிறகு அந்த யானை தானாகவே அங்கிருந்து சென்றது. அதன் பின்னரே மூதாட்டியும், பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர். காட்டு யானை வீட்டின் முன்பு கிடந்த டயரை வைத்து விளையாடிய காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com