நெய்க்காரப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

நெய்க்காரப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
நெய்க்காரப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
Published on

நெய்க்காரப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி, குதிரையாறு அணை பகுதியில் ஏராளமான தோட்டங்கள் உள்ளன. இங்கு மா, தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாயம் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே குதிரையாறு, பூஞ்சோலை கிராம பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. குறிப்பாக மலைப்பகுதியில் இருந்து வெளியேறி தோட்டங்களுக்குள் புகும் காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குதிரையாறு மலையடிவாரத்தில் உள்ள ரவி என்பவரது தோட்ட பகுதியில் சோலார்வேலியை சேதப்படுத்தி காட்டுயானை ஒன்று புகுந்தது. பின்னர் அங்குள்ள மாமரங்களை சேதப்படுத்தி சென்றது. காலையில் தோட்டத்துக்கு சென்ற விவசாயிகள் சோலார் வேலி, மரங்கள் ஒடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து கொழுமம் வனத்துறைக்கு விவசாயிகள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

யானைகள் அட்டகாசம் குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. இரவு மட்டுமின்றி பகலிலும் யானைகள் தோட்டத்தில் சுற்றித்திரிகிறது. அதை வனப்பகுதிக்குள் விரட்டவும், சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வனத்துறை போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

வனத்துறையினர் கூறும்போது, யானை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம். அதுபோல் அங்கு பகல் மட்டுமின்றி இரவிலும் வன பணியாளர்கள் ரோந்து செல்கின்றனர் என்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com