மசினகுடி-தெப்பக்காடு இடையே சாலையோரத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்

சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து காட்டு யானைகளை கண்டு ரசித்தனர்.
மசினகுடி-தெப்பக்காடு இடையே சாலையோரத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்
Published on

உதகை,

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதையொட்டி உள்ள மசினகுடி, கூடலூர் மற்றும் நீலகிரி வனக்கோட்டங்கள், முக்குருத்தி தேசிய பூங்கா ஆகியவை புலிகளின் முக்கிய வாழ்விடங்களாக உள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் புலிகள் வாழ்வதற்கான சூழலை கொண்டு உள்ளதாலும், வனத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலமாகவும் கடந்த சில ஆண்டுகளாக புலிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு கடும் உறைபனி தாக்கம் காணப்பட்டதால், முதுமலை வனப்பகுதி வறட்சியாக இருந்தது. இதனால் வனவிலங்குகள் இடம்பெயர்ந்து சென்றன. சமீபத்தில் பெய்த கோடை மழை காரணமாக வறட்சி நீங்கி, வேறு இடத்திற்கு சென்ற வனவிலங்குகள் முதுமலை வனப்பகுதிக்கு திரும்பி உள்ளன. இதனால் இயற்கை எழில் கொஞ்சும் முதுமலை வனப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

தண்ணீர் குடித்த யானைகள்

அவ்வப்போது புலிகள் குட்டிகளுடன் சாலைகளை கடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவ்வாறு வனவிலங்குகளை பார்க்க கடந்த சில நாட்களாக மைசூரு, வயநாடு உள்பட பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். காட்டு யானைகள் கூட்டமாக முதுமலையில் உலா வருகின்றன. இந்தநிலையில் மசினகுடி-தெப்பக்காடு சாலை ஓரத்தில் உள்ள பாறையில் தேங்கி இருந்த தண்ணீரை குட்டியுடன் காட்டு யானைகள் குடித்தன. பின்னர் ஒரு மணி நேரம் சாலையோரத்தில் முகாமிட்டன. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து காட்டு யானைகளை கண்டு ரசித்தனர். தற்போது யானைகள் சாலை ஓரங்களில் அதிக அளவு உலா வருவதால், வாகன ஓட்டிகள் யானைகளுக்கு இடையூறு செய்யக்கூடாது எனவும், குறிப்பாக வாகனங்களில் இருந்து இறங்கி செல்பி மற்றும் புகைப்படம் எடுக்க முயற்சி செய்யக்கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com