கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் உலா வந்த காட்டுயானைகள்

கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இரவு நேரத்தில், சாலையில் குட்டியுடன் 2 யானைகள் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மேலும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் உலா வந்த காட்டுயானைகள்
Published on

கோத்தகிரி

கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இரவு நேரத்தில், சாலையில் குட்டியுடன் 2 யானைகள் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மேலும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

குட்டியுடன் நின்ற காட்டு யானைகள்

கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. கோடை சீசன் துவங்கிய நிலையில் இந்த பலா மரங்களில் தற்போது பலாப்பழங்கள் காய்க்கத் தொடங்கி உள்ளன. கடந்த மாதம் முதல் சீசன் காரணமாக பலா மரங்களில் பலாக் காய்கள் காய்த்து குலுங்கத் தொடங்கி உள்ளன. பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து வந்துள்ள யானைகள் இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ளதுடன், சாலையோரங்களில் உள்ள பலா மரங்களில் உள்ள பலாப் பிஞ்சுகளை உண்பதற்காக கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அடிக்கடி உலா வருகின்றன.

இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு 10.30 மணியளவில் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் முதல் கொண்டை ஊசி வளைவிற்கு அருகே குட்டியுடன் 2 பெண் யானைகள் நின்றுக் கொண்டிருந்தன.

அரை மணி நேரம் சாலையில் உலா

யானைகளைக் கண்ட வாகன ஓட்டிகள் சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை நிறுத்தினர். இதன் காரணமாக சாலையின் இரு புறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காட்டு யானைகள் குட்டியை பாதுகாப்பாக நடுவில் நிறுத்தி வைத்துக் கொண்டு சாலையோரம் இருந்த செடி,கொடிகளை தின்றுக் கொண்டிருந்தது.

பின்னர் அந்த யானைகள் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றது. யானை அங்கிருந்து சென்ற பின்னரே அந்த சாலையில் போக்குவரத்து சீரானது. யானை சாலையில் நின்றதால் அந்த சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வனத்துறையினர் எச்சரிக்கை

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- தற்போது குஞ்சப்பனை சுற்றுவட்டார பகுதிகளில் பலாப் பழ சீசன் காரணமாக, பழங்களை தின்பதற்காக காட்டு யானைகள் அங்கு முகாமிட்டுள்ளதுடன், சாலைகளில் அடிக்கடி உலா வருகின்றன. அவ்வாறு யானைகளைக் கண்டால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவற்றை புகைப்படம் எடுக்க முயற்சி செய்யக் கூடாது.

மேலும் அவற்றிற்கு தொல்லை அளிக்கக் கூடாது. ஒலிப்பான் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com