

திண்டுக்கல்,
திண்டுக்கல், செம்பட்டி, வத்தலக்குண்டு, தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் வழியாக கேரள மாநிலம் குமுளிக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது.
138 கி.மீட்டர் தூரம் உள்ளதால் வாகன போக்குவரத்து குறைவாக இருப்பதாக கூறி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அகலப்படுத்தப்பட்ட இருவழிச்சாலையாக உருவாக்கியது. அப்போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு வரை உள்ள 35 கி.மீட்டர் தூரமுள்ள சாலையை அமைக்க 4 ஆண்டுகள் ஆனது. அதன் பின்னர் பெரியகுளம், தேனி வீரபாண்டி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய இடங்களில் புறவழிச்சாலை பணிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாகி நடந்து முடிந்தது.
திண்டுக்கல்- குமுளி சாலையில் கொடைக்கானல் சீசன் காலம், கேரள மாநில சபரிமலை அய்யப்பன் கோவில் சீசன், மூணாறு, தேக்கடி போன்ற சுற்றுலா இடங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
மேலும் விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது. எனவே நான்கு வழிச்சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் எம்.பி., தேனி எம்.பி., ஆகியோர் தீவிர கவனம் செலுத்தி நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.