

சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதற்காக மேற்கொள்ளப் படும் தொகுதிகள் மறுவரையறையின் போது தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது; அனைத்து மாநிலங்களையும் போலவே 50% அதிகரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்ட கூப்பாடு பொய் என்பது உறுதியாகியுள்ளது.
இது மிகவும் தாமதம் என்பதை உணர்ந்த மத்திய அரசு, இப்போது 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலேயே மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தீர்மானித்துள்ளது. இதற்காக 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்யவும், மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்தவும், அதில் 273 இடங்களை மகளிருக்கு வழங்கவும் அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்த முன்வரைவு உள்ளிட்ட 3 மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாட்டின் உள்துறை மந்திரி அமித்ஷா சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது; மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று பிரதமர் தான் வாக்குறுதி அளிக்க வேண்டும்; அதுவும் நாடாளுமன்றத்தில் தான் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று அடம் பிடித்தார். அதுமட்டுமின்றி, கறுப்புக்கொடி போராட்டம், தொகுதி வரையறை சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டம் என்று தேவையில்லாத பதட்டத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்த முயன்றார்.
ஆனால், தொகுதிகள் மறுவரையறையின் போது, தமிழகத்தின் தொகுதிகள் எந்த வகையிலும் குறைக்கப்படாது; மற்ற மாநிலங்களின் தொகுதிகள் எவ்வாறு 50% அதிகரிக்கப்படுகின்றனவோ, அதேபோல், தமிழ்நாட்டின் தொகுதிகளும் 50%, அதாவது 59 இடங்களாக அதிகரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் நாடாளுமன்றத்தில் அறிவித்ததன் மூலம் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வந்த பொய்யான பரப்புரை முறியடிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, மு.க.ஸ்டாலின் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரம், தெலுங்கானம், கேரளம், கர்நாடகம் ஆகிய 5 தென் மாநிலங்களிலும் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 129-லிருந்து 195 ஆக அதிகரிக்கப்படுகிறது. இந்த மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவம் இப்போதுள்ள 23.76 விழுக்காட்டிலிருந்து 23.87 விழுக்காடாக சற்று அதிகரிக்குமே தவிர எந்த வகையிலும் குறையாது. இதன் மூலம் தென் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலினும், அவரது சகாக்களும் நடத்திய நாடகங்கள் படுதோல்வி அடைந்திருக்கின்றன.
மு.க.ஸ்டாலினின் இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகவோ, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ வந்து விடக் கூடாது என்ற தீய எண்ணம் தான். தொகுதி மறுவரையின் மூலம் தமிழக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக உயர்த்தப்படும்; அதில் 20 இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்படும். இப்போது தமிழ்நாட்டிலிருந்து மக்களவைக்கு 5 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த தேர்தலில் குறைந்தது 20 பெண்கள் மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்; இவர்கள் தவிர பொதுத்தொகுதிகளில் இருந்து கூடுதலாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். அதேபோல், தமிழக சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை 351 ஆக உயர்த்தப்படும் போது, 117 பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக முடியும். ஆனால், தமிழ்நாட்டில் மகளிருக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறிய மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதையும் விரும்பவில்லை. அதனால் தான் மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை எதிர்க்கிறார்.
ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருக்கும் ஒருவர் அரசியலமைப்பு சட்ட நகலை எரிப்பது குற்றம் மட்டுமின்றி, தேசத் துரோகமும் ஆகும். 1986-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது அரசியலமைப்பு சட்ட நகலை எரித்ததற்காக பேராசிரியர் அன்பழகன், பரிதி இளம்வழுதி உள்ளிட்ட 10 திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை அப்போதைய பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் பதவிநீக்கம் செய்தது வரலாறு. இப்போது அரசியல் சட்டத் திருத்த மசோதாவை எரித்ததற்காக மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் நிறைவடையவுள்ளன. இந்த ஐந்தாண்டுகளில் தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் வெறும் 66-ஐ மட்டும் தான் நிறைவேற்றியிருக்கிறார். விலைவாசியைக் குறைக்கவோ, வேலைவாய்ப்புகளைப் பெருக்கவோ ஆக்கப்பூர்வமாக எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. மாறாக ஆண்டுக்கு ரூ.45,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்தியிருக்கிறார். இதனால் தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள ஆட்சியாளர்களுக்கு எதிரான கொந்தளிப்பை மடைமாற்றம் செய்யவே இத்தகைய சதிகளில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டார்.
மு.க. ஸ்டாலினின் அனைத்து சதிகளும் படுதோல்வி அடைந்து விட்ட நிலையில், தொகுதிகள் மறுவரையறை விவகாரத்தில் வீண்பழி சுமத்தி, பொய் பரப்புரை செய்த மு.க.ஸ்டாலின் அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். மாறாக, இனியும் திருந்தாமல், புதிது புதிதாக செல்லாத காரணங்களைக் கூறி, மகளிர் இடஒதுக்கீட்டு சட்ட முன்வரைவுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக வாக்களித்தால், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தாய்மார்களும் தங்களுக்கு எதிரான திமுகவுக்கு எதிராக வாக்களித்து ஆட்சியிலிருந்து விரட்டியடிப்பார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.