

சென்னை,
கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணை நிரம்பி விட்டதால் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னட கூட்டமைப்பு சார்பில் வருகிற 13-ந்தேதி கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட கூட்ட மைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்பட வேண்டும். அதுபோல் கர்நாடக விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லாதபோது காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது. இதை கர்நாடக அரசு கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (அதாவது இன்று) அத்திப் பள்ளியில் உள்ள கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் கன்னட கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும். காலை 11 மணிக்கு போராட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
அப்போது நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து வரும் தமிழக அரசு பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்த உள்ளோம். தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களை கர்நாடகத்துக்குள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
கன்னட கூட்டமைப்பினரின் இந்த போராட்ட அறிவிப்பால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருமாநில எல்லையிலும் போலீசாரும் குவிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இன்று (திங்கட்கிழமை) தமிழக அரசு பஸ்கள் உள் பட தமிழ்நாட்டில் இருந்து அத்திப்பள்ளி வழியாக அனைத்து வாகனங்களும் கர்நாடகத்துக்குள் அனுமதிக்கப்படுமா?, இல்லை எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்படுமா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.