

பழனி,
பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து அமலில் உள்ளதா? என்ற குழப்பம் பக்தர்களிடையே ஏற்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலில் புனித தன்மை பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக, கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துச் செல்ல படிப்பாதை, ரோப்கார் மற்றும் மின்இழுவை ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் செல்போன்களை ஒப்படைத்துவிட்டு பக்தர்கள் கோவிலுக்குச் செல்கின்றனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர் உள்பட 52 கோவில்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து பாதுகாப்பு பெட்டகத்தில் தங்கள் செல்போன்களை வைத்து விட்டு பக்தர்கள் கோவிலுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கோவில்களில் செல்போன் தடையை நீக்கி சில தளர்வுகளை அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, கோவில் வளாகத்தில் செல்போன்களை அணைத்து வைக்க வேண்டும் என்றும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால், பழனி முருகன் கோவிலில் தொடர்ந்து செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது. நுழைவு வாயில்களிலும் செல்போன்கள் சோதனை செய்யப்படுகின்றன. இதனால், புதிய அறிவிப்பின்படி செல்போன் கொண்டு செல்லலாமா, பழைய தடை தொடர்கிறதா என பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே, பக்தர்களின் குழப்பத்தைப் போக்க கோவில் நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.