ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க மத்திய அரசு காலம் தாழ்த்துவதா? - சீமான் கண்டனம்

தமிழ்நாடு அரசின் கோரிக்கை 20 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருப்பது தமிழ்மொழிக்கும் தமிழர்களுக்கும் இழைக்கப்படும் அநீதி என சீமான் தெரிவித்துள்ளார்.
ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க மத்திய அரசு காலம் தாழ்த்துவதா? - சீமான் கண்டனம்
Published on: 

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

மத்திய அரசின் அலட்சியப் போக்கு

”தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கும் கோரிக்கையை நிறைவேற்றாமல் 20 ஆண்டுகளாகக் கிடப்பில் வைத்திருக்கும் மத்திய அரசின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது! இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில், தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க வேண்டுமென்ற நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

இந்திய அரசியலமைப்பின் கூறு 348(2) மற்றும் மொழிச் சட்டத்தின் பிரிவு 7 ஆகியவை குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் மாநில மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாக்குவதற்கு வழிவகை செய்கின்றன. இதன் அடிப்படையில் 1950, 1969, 1971, 1972 ஆகிய ஆண்டுகளில் முறையே ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் இந்தி உயர்நீதிமன்ற மொழியாக ஆக்கப்பட்டது.

ஒப்புதலுக்கு அனுப்பாமல்..

ஆனால், மேற்குறிப்பிட்ட மாநிலங்களைப் போலவே வங்காளம், தமிழ்நாடு, குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களும் முறையே 1997, 2006, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் தங்களது மாநில மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாக்கக் கோரிக்கை வைத்தும், உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி, அக்கோரிக்கைகளை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் மத்திய அரசு தொடர்ந்து முடக்கி வைத்திருப்பது மொழிச் சமத்துவத்திற்கு எதிரான செயலாகும்.

1965ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கூட்டத்தில், மாநில மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாக்குவது தொடர்பாக மாநிலங்கள் கோரிக்கை விடுத்தால் அதனைப் பரிசீலிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 21.05.1965 அன்று மத்திய அமைச்சரவையிலும் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகைய தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்படாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழ்மொழிக்கு இழைக்கப்படும் அநீதி

தமிழக சட்டமன்றம் 06.12.2006 மற்றும் 03.09.2026 ஆகிய தேதிகளில் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவதற்கான தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இருப்பினும், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படாமல், தமிழ்நாடு அரசின் கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் கிடப்பில் போடப்பட்டிருப்பது தமிழ்மொழிக்கும் தமிழர்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்.

நீதிமன்றத்தில் வழக்காடும் தமிழர்கள் தங்களது தாய்மொழியிலேயே வழக்காடவும், நீதிமன்ற நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ளவும், நீதியை எளிதாகப் பெறவும் தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குவது இன்றியமையாததாகும். தாய்மொழியில் நீதி பெறுவது என்பது மக்களின் அடிப்படை உரிமையோடு தொடர்புடையதாகும்.

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவது என்பது வெறும் மொழி சார்ந்த கோரிக்கை மட்டுமல்ல; அது தமிழர்களின் மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, நீதிக்கான உரிமை ஆகியவற்றை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமையாகும்.

மேலும், தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கக் கோரி MHAA தாக்கல் செய்துள்ள W.P. No. 43981/2026 பொதுநல வழக்கில், தமிழ்நாட்டின் பெருமை வாய்ந்த வழக்கறிஞர் சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து தங்களைத் தரப்பினராக இணைத்துக்கொண்டு, தமிழின் உரிமைக்கான சட்டப் போராட்டத்தை வலுப்படுத்த முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவதற்கான கோரிக்கையை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X