சமையல் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படுமா? மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் - அன்பில் மகேஸ்

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை மத்திய அரசு சரியாக கையாள்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அன்பில் மகேஸ் கூறினார்.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படுமா? மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் - அன்பில் மகேஸ்
Published on

சென்னை,

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “இந்திய ஒன்றியத்தில் மாநிலங்களை அரவணைத்து அதன் தேவையை பூர்த்தி செய்வதில் தோல்வியடைந்த மத்திய பாஜக அரசு, இன்று சர்வதேச அளவில் வெளியுறவுக் கொள்கை என்ற விஷயத்திலும் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது எனும் விமர்சனம் எழுந்துள்ளது. மேற்காசிய போர் சூழல் காரணமாக இந்தியாவில் நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை மத்திய அரசு சரியாக கையாள்கிறதா என்ற சந்தேகம் நாட்டின் குடிமகன்களில் ஒருவனான எனக்கும் எழுகிறது.

ஏற்கனவே டெல்லியில் தனது கட்சியை அடமானம் வைத்த அதிமுக தலைமை பொதுநலன் என்பதை மறந்து தங்களின் எஜமானர்களின் மனதை குளிர்விக்கவே முயற்சி செய்கிறார்கள். தங்களின் உரிமையை பற்றியே தெரியாத அதிமுகவினர் வெளியுறவு கொள்கையில் சமையல் எரிவாயு விஷயத்தில் மாநில அரசுடன் காற்றில் கத்திச்சண்டை போடுகிறார்கள்.

மார்ச்10-ஆம் தேதியே தமிழக அரசு உயர் அலுவலர்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இந்த விவகாரத்தில் விரைந்து தீர்வை காண மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. மக்கள் யாரும் அச்சப்படவேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு மத்திய அரசின் நடவடிக்கைக்கு துணை நிற்போம் என்றும் தமிழக அரசு கூறியது. சமையல் எரிவாயு பிரச்சினையை சமாளிக்க எட்டு விதமான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது என பொறுப்போடு திமுக அரசு செயல்பட்டது. இதற்கு பிறகும் மத்திய அரசு பாராமுகத்துடன் அலட்சியமாக அணுகியதால் தான் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் மார்ச் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

அதேபோல் நாடாளுமன்ற வளாகத்திலும் நமது கூட்டணி கட்சிகள் எம்.பி.க்கள் சார்பில் போராட்டம் நடத்தினார்கள். இப்படி மாநில அரசின் மூலமாகவும் கழகத்தின் மூலமாகவும் மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு அனைத்து வகையிலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலாற்றுகிறார். இதற்கு பிறகும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு எந்த தீர்வும் காணாமல் இருக்கிறது. ஆனால் மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு பீதியை ஏற்படுத்தி வருகிறது.

இத்தனைக்கும் பொறுப்பான மத்திய அரசு என்ன செய்கிறது என்ற மக்களின் கேள்விக்கு பதில் கிடைக்குமா? சமையல் எரிவாயு தட்டுப்பாடு பிரச்சினை தீர்க்கப்படுமா? எளிய குடிமக்களின் இந்த சந்தேகத்திற்கு பதில் கிடைக்க வேண்டும். அல்லது தனது டெல்லி எஜமானர்களிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டு சொல்ல வேண்டும்” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com