விஷ சாராய வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படுமா..? அமைச்சர் ரகுபதி பதில்

விஷ சாராய வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 70 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில்தான் சாராயம் தயாரித்து, விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் பலருக்கு தெடர்பு உள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. விஷசாராயம் மரணம் தெடர்பான வழக்கை காவல்துறை விசாரித்தால் நியாயமாக இருக்காது. அதனால் சி.பி..ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்த சூழலில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதன்படி, விஷ சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வு உத்தரவிட்டது.

மேலும் போலீசாருக்கு தெரியாமல் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதனைத்தொடர்ந்து வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க தமிழக போலீசாருக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. 

இந்நிலையில் விஷ சாராய வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படுமா என்ற கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பார். சில கட்சிகள் சி.பி.ஐ. விசாரணை கோரியதை அரசியலாகத்தான் பார்க்க முடியும். விஷ சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட யாரும் சி.பி.ஐ. விசாரணை கேட்கவில்லை" என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com