‘இன்று தீபத்தை தடுத்தவர்கள் நாளை கோவிலுக்கு போகக்கூடாது என்று சொல்வார்களா?’ - அஸ்வினி வைஷ்ணவ் கேள்வி

கோடிக்கணக்கான இந்து மக்களின் உணர்வுகளை த.வெ.க. அரசு புண்படுத்தியுள்ளது என அஸ்வினி வைஷ்ணவ் குற்றம்சாட்டியுள்ளார்.
‘இன்று தீபத்தை தடுத்தவர்கள் நாளை கோவிலுக்கு போகக்கூடாது என்று சொல்வார்களா?’ - அஸ்வினி வைஷ்ணவ் கேள்வி
Published on: 

சென்னை,

அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை தி.நகரில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசிய அவர், த.வெ.க. அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இது குறித்து அவர் பேசியதாவது;-

இந்துக்களின் உணர்வுகள்

“ஆட்சி மாறினாலும் தமிழ்நாடு இன்னும் அப்படியேதான் இருக்கிறது. கோவிலில் தீபம் ஏற்றுவதை தடுத்ததன் மூலம் கோடிக்கணக்கான இந்து மக்களின் உணர்வுகளை த.வெ.க. அரசு புண்படுத்தியுள்ளது. இனி அடுத்து என்ன நடக்கும்?

இன்று தீபத்தை தடுத்தவர்கள் நாளை கோவிலுக்கு போகக்கூடாது என்று சொல்வார்களா? அவர்கள் கோவில்களை மூடிவிடுவார்கள். அதுதான் அவர்களுக்கு வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் மீதான உண்மையான மரியாதை என்பது மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதும், நமது கலாசாரம் மற்றும் நமது தொன்மையான பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்வதும் ஆகும்.

தமிழர்களின் தன்மானம்

கோவிலில் ஒரு தீபம் ஏற்றுவதை தடுப்பதில் சிலர் வெற்றி பெற்றாலும், தமிழ் மக்களின் வளர்ச்சியையோ, முன்னேற்றத்தையோ, உலக அந்தஸ்தையோ அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது. அவர்களின் தன்மானம் சிதையாமல் அப்படியே உள்ளது.

ரெயில்வே திட்டங்கள்

தமிழகத்தில் ரெயில்வே திட்டங்களுக்குத் தேவைப்படும் சுமார் 4,800 ஏக்கர் நிலத்தில், மாநில அரசு வெறும் 1,253 ஏக்கர், அதாவது வெறும் 24 சதவீதத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கான ரெயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை த.வெ.க. அரசு விரைந்து முன்னெடுத்தால், மத்திய அரசு அனைத்து நிதிகளையும் வழங்கி, ஒவ்வொரு திட்டத்தையும் எவ்வித இடையூறுமின்றி முடித்துத் தரும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

காங்கிரஸ்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து எந்தவித எதிர்ப்பும் இன்றி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) வெற்றிகரமாக நடத்தப்பட்டது. காங்கிரஸ் தங்கள் சொந்த தோல்விகளுக்கு எஸ்.ஐ.ஆர். மீது பழிபோடுகிறது. அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் முக்கியமல்ல, குடும்ப அரசியல்தான் முக்கியம். அது ஒன்றுதான் அவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் டாக்டர் அம்பேத்கரின் தத்துவத்தை நம்புவதில்லை.

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, இமாசல பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைக் கூட வெல்லவில்லை.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X